TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
TNPSC அறிவியல் - வேதியியல்
TNPSC - Indian Geography
TNPSC இந்திய ஆட்சி அமைப்பு












இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப ராமாயணம் எனப்பட்டது.
இந்நூல் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவையும், படலம் (118 படலம்) என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
கம்பராமாயணம் 10,589 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார்.
காண்டங்களின் பெயர்
படல எண்ணிக்கை
பாலகாண்டம் – 24
அயோத்தியா காண்டம் – 13
ஆரண்ய காண்டம் – 13
கிட்கிந்தா காண்டம் – 17
சுந்தர காண்டம் – 14
யுத்த காண்டம் – 43
ஆசிரியர் குறிப்பு
கம்பர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் தேரழுந்தூரில் பிறந்தார். கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தார். இவரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்.
கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.
“கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்; சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்; திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்; “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழ்பெற்றவர்; சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
சில முக்கிய படலங்கள்
பாலகாண்டம் – ஆற்றுப்படலம்
(ஆறு இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது.)
தா துகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்
போ தவிழ் பொய்கை தோறும் புதுமணற் றடங்க டோறும்
மா தவி வேலிப் பூக வனம்தொறும் வயல்க டோறும்
ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே.
பொருள்: மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயு ஆறு. அது, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது.
பாலகாண்டம் – நாட்டுப்படலம்
(இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன்கவி காட்டுகிறது.)
தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண்
விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகளினிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ.*
பொருள்: குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.
பாலகாண்டம் – நாட்டுப்படலம்
(ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக்கொண்டு, ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.)
வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்
றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்
உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்
வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்.
கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்
(இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ‘ஐயோ’ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.)
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான். *
பொருள்: பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.
அயோத்தியா காண்டம்- கங்கை காண் படலம்
(கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்று பாரதி சொல்வதை இதில் உணரமுடியும்.)
ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ
தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ
ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ.
பொருள்: ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக்கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?
யுத்த காண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
(உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், கும்பகருணனை எழுப்பும் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது.)
உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்
இறங்கு கின்ற தின்று காணெழுந்தி ராயெ ழுந்திராய்
கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே
உறங்கு வாயு றங்கு வாயி னிக்கி டந்து றங்குவாய்.
பொருள்: உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!
அயோத்தியா காண்டம் – குகப் படலம்
குகன்
வேடுவர் தலைவன் குகன். பாறை உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்டவன் அவன். காட்டிற்குச் செல்லும் இராமன், கங்கையைக் கடக்க அவன் உதவுகிறான். அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவும் வகையில் இராமன் குகன் நட்பு முகிழ்க்கிறது. இராமன் இளவரசனாக இருப்பினும் வேடனான குகனை உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான்.
பின்னாளில் அவனைச் சந்திக்கும் பரதனும் “எனக்கும் மூத்தோன்” எனக் குகனை ஏற்கிறான்.
அன்னவன் உரை கேளா
அமலனும் உரை நேர்வான்
என்உயிர் அனையாய் நீ
இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்;
நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில்
உரிமையின் உள்ளேன்.
பொருள்: குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன் “என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி ; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்” என்று கூறினான்.
‘துன்பு உளதுஎனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்*
பொருள்: இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான், குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன்பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.
ஆரணியகாண்டம் – சடாயு உயிர் நீத்த படலம்
சடாயு
இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது கழுகு வேந்தன் சடாயு தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
இந்தனம் எனைய என்ன கார்
அகில் ஈட்டத்தோடும்
சந்தனம் குவித்து வேண்டும்
தருப்பையும் திருத்தி, பூவும்
சிந்தினன் மணலின் வேதி
தீது அற இயற்றி, தெண் நீர்
தந்தனன் தாதை தன்னைத் தடக்
கையான் எடுத்துச் சார்வான்.
பொருள் : “எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டுவந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.
ஆரணிய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்
சவரி
இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும்கொண்டவள் சவரி.சீதையைத்தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் இவள். அவ்வகையில் காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்குபவள் சவரி. இராமன், அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.
அன்னது ஆம் இருக்கை நண்ணி,
ஆண்டுநின்று, அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்
தலைப்பட்டு, அன்னாட்கு
இன்னுரை அருளி, தீது இன்று
இருந்தனை போலும் என்றான்
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
ஓர் மூலம் இல்லான்.
பொருள்: இவனுக்கு முன்னே இப்படியொருவர் இருந்தார் என்று பிறிதொருவரைக் காட்ட இயலாத நிலையிலுள்ள முதற்பொருளாகிய இராமன், சவரியிடம் இனிதாகப் பேசினான். தன்னையே நினைத்துத் தவமிருந்த சவரியிடம், “இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?” என்று பரிவுடன் கேட்டான்.
ஆண்டு , அவள் அன்பின் ஏத்தி,
அழுது இழி அருவிக் கண்ணள்,
மாண்டது என் மாயப் பாசம்;
வந்தது, வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்;
போயது, பிறவி, என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க.
விருந்து செய்து இருந்த வேலை
பொருள்: அப்போது சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள்.(இராமனைக் கண்டதால்) ” என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது; என் பிறவி ஒழிந்தது” என்று கூறினாள். வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவனுக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.
கிட்கிந்தா காண்டம் – நட்பு கோட்படலம்
சுக்ரீவன்
சீதையைத் தேடி வரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன், சுக்ரீவனை அழைத்து வந்தான். சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.
தவா வலி அரக்கர் என்னும்
தகா இருள் பகையைத் தள்ளி,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற
காலத்தின் கூட்டம் ஒத்தார்
அவா முதல் அறுத்த சிந்தை
அனகனும், அரியும் வேந்தும்
உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்.
பொருள் : குறையாத வலிமை உடையவர்களும் வேண்டாத இருள் போன்றவர்களுமாகிய பகைவர்களை அழித்து அறங்கள் அனைத்தையும் நிலைபெறச் செய்வதற்கு ஏற்ற உரிய காலம்போல் இராமனும் சுக்ரீவனும் ஒருங்கிருந்தார்கள். ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும் வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தார்கள்.
மற்று இனி உரைப்பது என்னே?
வானிடை மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்
கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என்
இன் உயிர்த் துணைவன் என்றான்.
பொருள்: இராமன் சுக்ரீவனிடம், “இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்; தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என் நண்பர்கள்; உன் உறவினர் என் உறவினர்; அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ, என் இனிய உயிர் நண்பன்!” என்றான்.
யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம்
வீடணன்
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென வீடணன், இராவணனிடம் கூறுகிறான். அவன் கூற்றை மதியாத இராவணன், வீடணனைக் கடிந்தான். இலங்கையை விட்டு வந்த வீடணன், இராமன் இருக்குமிடம் வந்து அடைக்கலம் வேண்டினான். இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை அவனுக்கு உரிமையாக்கினான்.
ஆழியான் அவனை நோக்கி,
அருள்சுரந்து, உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற
உலகும் என் பெயரும் எந் நாள்
வாழும் நாள், அன்றுகாறும்,
வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம்
நின்னதே, தந்தேன் என்றான்.
பொருள்: ஆணைச்சக்கரத்தையுடைய இராமன் உள்ளத்தில் கருணை பொங்க வீடணனிடம், “ஒளிபொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வதும் ஆழமான கடல் நடுவே உள்ளதுமான இலங்கை அரசாட்சி, ஏழேழாகிய பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்” என்று கூறினான்.
குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மக னொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து,
புதல்வரால் பொலிந்தான் நுந்தை*
பொருள்: (நாங்கள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம்). குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்புகொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.