fbpx
  • No products in the basket.

9.8. செய்கு தம்பி

· தமிழ் கவிஞர், சொற்பொழிவாளர்

· மத எல்லைகளைக் கடந்து ஆன்மிகப் பணியில் ஈடுபட்டவரும், தமிழகத்தின் முதல் ‘சதாவதானி’ என்ற பெருமைக்குரியவருமான செய்குத் தம்பி பாவலர் (Sheikh Thambi Pavalar) பிறந்த தினம் இன்று (ஜூலை 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து

· கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அடுத்த இடலாக்குடியில் (1874) பிறந்தார். அப்போது அந்தப் பகுதி, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் பள்ளிகளில் மலையாளமே பயிற்றுமொழியாக இருந்தது. இவரும் மலையாளத்திலேயே பள்ளிக்கல்வியை முடித்தார்.

· சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்று, இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, ஐம்பெரும் காப்பியங்கள், திருக்குறள், தொல்காப்பியம் என அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். அசாதாரண அறிவாற்றல், நினைவுத் திறன் பெற்றிருந்தார்.

· அந்தாதியாகவும், சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலையை கைவரப் பெற்றார். முதன்முதலாக ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்தில் பிழை திருத்தும் புலவராகப் பணியமர்ந்தார். அப்போது, சீறாப்புராணத்துக்கு உரையெழுதி பதிப்பித்தார். சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

· நாஞ்சில் நாட்டில் 1920-ல் காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தவர், கதராடைக்கு மாறினார். பொதுக்கூட்டங்களை தலைமையேற்று நடத்தினார். பாட்டுகள், உரை எழுதுதல், பதிப்பித்தல் மட்டுமன்றி இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

· பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், சமயத் தத்துவங்களைப் பட்டிதொட்டியெங்கும் செந்தமிழில் பரப்பினார். வள்ளலார் குறித்து தமிழகம் முழுவதும் உரையாற்றினார். மத நல்லிணக்கத்துக்காகப் பெரிதும் பாடுபட்ட இவருக்கு, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பூரணகும்ப மரியாதையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது.

· ‘தமிழ் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி’, ‘திருக்கோப்பற்றுப் பதிஞ்சம்’, ‘பத்தந்தாதி’, ‘திருமதினந்தாதி’, ‘கோப்பந்துக் கலம்பகம்’, ‘கோப்பந்துப் பிள்ளைத் தமிழ்’, ‘கவ்வத்து நாயகம்’, ‘இன்னிசைப் பாமாலை’, ‘நீதி வெண்பா’, ‘ஷம்சுத்தாசின் சேவை’ உள்ளிட்ட ஏராளமான கவிதைகள், வசனநடைக் காவிய நூல்களைப் படைத்தார்.

· 100 வெவ்வேறு விதமான கேள்விகள், சந்தேகங்களுக்கு தக்க பதில் தருகின்ற ‘சதாவதான’ சாதனையை சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் 1907-ல் நிகழ்த்திக் காட்டினார். இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, தலைவரோடு உரையாடல், இலக்கியம், இலக்கணம், இருமுறை கேட்டு வெண்பாவை ஒப்பித்தல் உள்ளிட்ட 16 விஷயங்களில் இக்கேள்விகள், சந்தேகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், ‘முதல் சதாவதானி’ எனப் போற்றப்பட்டார்.

· ஒருமுறை இவர் சதாவதானம் நிகழ்த்தும்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்ற வெண்பா ஈற்றடியை எடுத்துக் கொடுத்தார். உடனே இவர், ‘பரத, லட்சுமண, சத்’ என்று முந்தைய அடியில் சேர்த்து, ‘பரத, லட்சுமண, சத்துருக்கனுக்கு ராமன் துணை’ என்று பாட்டை முடித்துவைத்து பாராட்டு பெற்றார்.

· ‘நோன்பை மறவாதே’, ‘கள்ளைக் குடியாதே’ உள்ளிட்ட தலைப்புகளில் பேசியும், பாடியும் மக்களின் சிந்தனைகளைத் தூண்டினார். கவிமணியால் ‘சீரிய செந்தமிழ்ச் செல்வன்’ என்றும், பாண்டித்துரைத் தேவரால் ‘தமிழின் தாயகம்’ என்றும் போற்றப்பட்டார். அரை நூற்றாண்டுக்கு மேலாக பொதுத் தொண்டில் ஈடுபட்டவர்.

· மனிதநேயமும், ஆன்மநேயமும் கொண்ட அற்புத மனிதரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர் 76-வது வயதில் (1950) மறைந்தார். கன்னியாகுமரியில் தமிழக அரசு சார்பில் இவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது நினைவாக மத்திய அரசு சிறப்பு தபால்தலை வெளியிட்டது.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link