fbpx
  • No products in the basket.

9.2. சித்தர் பாடல்கள்

'சித்து' என்ற சொல் அறிவு என்னும் பொருளைக் குறிக்கும். சித்தர் என்னும் சொல் அறிவுடையோர் என்ற பொருளைத் தரும். சித்தர் இலக்கியம் சடங்குகள், சம்பிரதாயங்கள், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்தது. அதே சமயம் மெய்யியல் அனுபவங்களையும் முன்வைத்தவர்கள் சித்தர்கள். உருவ வழிபாடுகளை எதிர்த்துள்ளனர். சாதி, சமய ஏற்றத்தாழ்வையும் எதிர்த்துள்ளனர். வானவியல், யோகாசனம், வர்மம், பஞ்சபட்சி சாஸ்திரம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் பெற்றிருந்தனர். பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி சித்தர்களின் கொடையாகும். சித்தர்கள் தமது கண்டு பிடிப்புகளையும் ஆற்றல்களையும் மக்களின் நன்மைக்கே பெரும்பாலும் பயன்படுத்தினர். இவர்கள் தம்பாடல்களின் வழி சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்தவர்கள். சித்தர்கள் பெரிதும் மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைக் கூறி, மனத்தையும் உடலையும் யோகப்பயிற்சியால் ஒருமுகப்படுத்தலாம் என்னும் தத்துவத்தைத் தந்துள்ளனர். சித்தர்கள், மருத்துவத்தில் 'சித்தமருத்துவம்' என்ற தனிப்பிரிவு தோன்றும்படி பல்வேறு நோய்களையும் அவை தீர்க்கும் மருந்துகளையும் கண்டறிந்தவர்கள்.


இடைக்காட்டுச் சித்தர் பாடல்

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை

விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே!

பாலிற் சுவைபோலும் பழத்தில் மது போலும்

நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே!

எள்ளில் தைலம் போல் எங்கும் நிறைபொருளை

உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே!

- இடைக்காட்டுச் சித்தர்


ஆசிரியர் குறிப்பு

இடைக்காடு என்ற ஊரில் பிறந்ததனால் இவர் இடைக்காட்டுச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் போகர் என்ற சித்தரின் சீடர். 'இடைக்காடர் ஞான சூத்திரம் எழுபது என்பது இவருடைய நூல். மெய்ப்பொருளின் தன்மையினையும் பிறவியற்ற பேரின்ப நிலையை எய்தும் வழியினையும் இவர் பாடியுள்ளார்.


பொருள்

நம் கண்ணில் இருக்கும் கருமணி போன்றவனை; நாம் கருதுகின்ற மாபெரும் ஒளியைப் போன்றவனை; விண்ணில் விளங்கும் சுடர் போன்றவனை; திருவிளக்கின் ஒளியாய்த் திகழ்பவனை எந்நாளும் போற்றுவீராக. பாலில் மறைந்துள்ள சுவை போலவும் பழத்தில் மறைந்துள்ள இனிமை போலவும் நூல்களில் மறைந்துள்ள நுட்பமான கருத்துகள் போலவும் உலகப் பொருள்களில் எல்லாவற்றிலும் நுட்பமாய் மறைந்திருக்கும் இறைவனைப் போற்று வீராக. எள்ளின் உள்ளிருக்கும் எண்ணெய்யைப்போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை உள்ளத்தில் இருத்தி, உணர்வுடன் போற்றுவீராக.


குதம்பைச் சித்தர் பாடல்

வெட்ட வெளிதன்னைமெய்யென்று இருப்போர்க்குப்

பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்!

பட்டயம் ஏதுக்கடி.

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்

கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்!

கற்பங்கள் ஏதுக்கடி.

முத்தமிழ் கற்று முயங்கும்மெய்ஞ் ஞானிக்குச்

சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்!

சத்தங்கள் ஏதுக்கடி.

- குதம்பைச் சித்தர்


ஆசிரியர் குறிப்பு

இவருடைய பாடல்களில் 'குதம்பாய்' என்று மகடூஉ முன்னிலை வருவதால், இவர் 'குதம்பைச் சித்தர்' என்று அழைக்கப்பட்டார். இவர் பாடல்களில் சித்தர்களின் இயல்புகள் பேசப்படுகின்றன.


பொருள்

குதம்பாய்! உலகம் நிலையற்றது. வெட்ட வெளியாகிய உலக இயக்கமே நிலையானது என்ற கொள்கையுடைய சான்றாண்மை உடையோருக்கு அதற்கான உரிமை ஆவணம் எதற்கு? மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்த மெய்ஞ்ஞானியர்க்குப் புற உடலுக்கு வலிமை தரும் காயகற்ப மருந்துகள் எதற்கு? மூன்று தமிழையும் கற்று மெய்ப்பொருளோடு இணைந்துவிட்ட மெய்ஞ்ஞானிகளாகிய சித்தர்களுக்குச் சத்தமிட்டுப் பாடும் வெற்றுக்கூப்பாடுகள் எதற்கு?


· சித்துக்களைச் செய்ய வல்லவர்கள் சித்தர்கள் ஆவர்.

· சித்துக்கள் 8 வகைப்படும், இவற்றை அட்டமா சித்திகள் என்பர்.

1. அணிமா  -  உடலைச் சிறிதாக்குதல்

2. மகிமா  -  உடலைப் பெரிதாக்குதல்

3. கிரிமா  -  மலை போன்று உடலைத் திடமாக்குதல்

4. இலகிமா  -  உடலைப் பஞ்சு போன்று இலேசாக்குதல்

5. பிராப்தி  -  எதையும் நினைத்தமாத்திரத்தில் அடைதல்

6. பிராகாவியம் -  துறத்தல்

7. ஈசத்துவம் -  ஒன்றைப் படைத்தல், காத்தல், அழித்தல்

8. வசித்துவம் -  உயிர்களைத் தன்வயப்படுத்தி நடக்கச் செய்தல்


· பெரும்பாலோர் ‘சைவர்கள்’. சாதி, மதம், ஆண், பெண் பேதமற்றவர்கள்.

· சித்தர்கள் அறுபதுக்கு மேற்பட்டோர் உண்டு என்றும், 18, 108, 1008 என்னும் எண்ணிக்கையில் கூறுவதும் உண்டு. எனினும் 18 என்று கூறுவதே மரபு.

· இவர்களில் சிலர் யோகிகளாகவும், மருத்துவர்களாகவும் (சித்த மருத்துவம்) விளங்கினர்.


ஒரு பாடலில் இவர்களைப் பற்றி,

“நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்சீசர்

நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்

தந்திடைக்காரரும் போகர் புலிக்கையீசர்

கருவூரர் கொங்கணர் கலாநதி

சித்தி எழுகண்ணர் அகப்பேயர் பாம்பாட்டி

தேரையரும் குதம்பையரும் சட்டை நாதர்

செந்தமிழ் சேர் சித்தர் பதினென் பாதம்

நிந்தையுண்ணிச் சிரத்தணியாய் சேர்த்தி வாழ்வாம்”

என்று கூறப்பட்டுள்ளது.


1) திருமூலர்

· மூலன் உடலில் இருந்ததால் திருமூலர் என்று அழைக்கப்பட்டார்.

· ஆண்டுக்கு ஒரு முறை விழித்தெழுந்து ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்கள் பாடினார். இதுவே திருமறையான திருமந்திரம் எனப்படுகிறது.

· இது 9 தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

· சைவ சித்தாந்தம், தத்துவமசி என்னும் சொற்கள் முதன்முதலில் திருமந்திரத்தில் தான் காணப்படுகின்றன.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”


2) சிவவாக்கியர்

· இவர் யோகசித்தர் ஆவார்.

· இவரது பாடல்கள் சிந்தனையையும், தெளிவையும் தரவல்லன.

· பாடிய பாடல்கள் 520.

“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பும் சாத்தியே

சுற்றிவந்து மொணமொ ணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்டகல்லும் பேசுமா நாதன் இருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”


3) பட்டினத்தார்

· இவர் நிலையாமையினை உணர்ந்த யோகி ஆவார்.

· மனித வாழ்வினை

“நாற்றப் பாண்டம் நான்முழத்து ஒன்பது

பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்” என்று எடுத்துரைக்கிறார்.


4) பத்திரகிரியார்

· இவர் துளுவ நாட்டு மன்னர். பட்டினத்தாரைக் கழுவேற்ற முயன்றபோது தோற்று அவருக்கே அடிமையாகி அரச இன்பங்களைத் துறந்தார்.

· இவரது பாடல்கள் ‘பத்திரகிரியார் புலம்பல்’ எனப்படும்.

“பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்

தாய்போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம்”


5) பாம்பாட்டிச் சித்தர்

· இவர் கொங்கு நாட்டு மருத மலையில் வாந்தவர் என்பர். 129 பாடல்களை இயற்றியுள்ளார்.

· பாம்பு வடிவாக மண்டலித்து உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி அதன்மூலம் ஆன்ம தரிசனம் பெற இயலும் சக்தியை மேலே எழுப்பி ஆடு பாம்பே எனப் பாடியதால் பாம்பாட்டிச்சித்தர் எனப் பெயர் பெற்றார்.


6) இடைக்காட்டுச் சித்தர்

· இடக்காடு என்னும் ஊரினராதலால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.

· கோனார் என வழங்கப்படும் இடையர்களையும், ஆடுமாடுகளையும் முன்னிருத்திப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.

· இவர் கொங்கணச் சித்தரின் சீடர், காலம் கி.பி.15ம் நூற்றாண்டு.

“அவித்த வித்து முனையாதே தாண்டவக்கோனே – பத்தி

அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே”


7) அகப்பேய்ச் சித்தர்

· அலையும் மனதினைப் பேய் என உருவகித்துப் பாடியதால் இவருக்கு இப்பெயர் என்பர். பேய் மணத்தைப் பெண்ணாக விளித்துப் பாடுகிறார். மனத்தை அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பதனை,

“ஆரலைத் தாலும் நீயலை யாதேடி

ஊரலைந் தாலும் ஒன்றையும் நாடாதே!” எனப் பாடியுள்ளார்.


8) குதம்பைச் சித்தர்

· குதம்பை என்பது காதணி. அந்த குதம்பை அணிந்த பெண்களை முன்னிலைப் படுத்திப் பாடியதால் இவருக்கு இப்பெயர். இவரது பாடல்கள் 32.

· ஈறில்லாப் பெருவாழ்வை இவர்,

“சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு

ஏகாந்தம் ஏதுக்கடி?குதம்பாய் ஏகாந்தம் ஏதுக்கடி” எனக் குறிப்பிடுகிறார்.


9) கடுவெளிச் சித்தர்

· வாக்கு மனம் கடந்து பரவெளியைக் கடுவெளி எனப்பாடியதால் இவருக்கு இப்பெயர்.

· பாடிய கண்ணிகள் 34, காலம் கி.பி.15ம் நூற்றாண்டு.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்

நாலாறு வருசமாய் குயவனை வேண்டி

கொண்டுவந்தான் ஒரு தோண்டி”

எனப் பாமரரும் அறிந்த பாடல் இவரது பாடல் ஆகும்.


10) அழகணிச் சித்தர்

· அழகு + அணி = அழகணி.

· இவரது பாடல்கள் அழகும் அணி நயமும் மிகுந்து காணப்படுவதால் இவருக்கு இப்பெயர்.

· பாமரர் நாவில் அழுகுணிச்சித்தர் என வழங்குவதாயிற்று.

“பையூரி லேயிருந்து பாழுரிலே பிறந்து

மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்”

என்னும் தேடலை இவர் அழகாக இயற்றியுள்ளார்.


11) கொங்கணிச் சித்தர்

· கொங்குநாட்டை சேர்ந்தவராதலால் இவருக்கு இப்பெயர். காலம் கி.பி.7ம் நூற்றாண்டு.

· இவர் ரசவாதம், யோகம், மருத்துவம் பற்றிய நூல்களை எழுதியுள்ளார்.

“கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரம் விள்ளாதே

பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே”

என அறிவுறுத்துகிறார்.


12) சட்டை முனி

· சட்டை முனி ஆயிரத்தி இருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு முதலியன நூல்களை இயற்றியுள்ளார்.

· தயக்கத்தினால் வரும் தீமை பற்றி,

“தயங்கினார் கலகத்தில் கோடிபேர்கள்,

சாவதும் பிறப்பதும்காவடி போல் ஆச்சு

தயங்கினார் துயரத்தில் ஞானம் போச்சு”   என எச்சரிக்கிறார்.


13) அகத்தியர்

· அகத்தியச் சித்தர், சித்த மருத்துவ முறைகளை வகுத்தவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். (அகத்தியர்கள் பலர் உள்ளனர்)

· அனைத்து சமயத்தவர் கொள்கைகளிலும் உள்ள மேன்மைகளைப் போற்ற வேண்டும் என்கிறார் இவர்.

“பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே

பலவேத சாத்திரமும் பாருபாரு”


14) சுப்பிரமணிய சித்தர்

· பல பாடல்களில் முருகனை ‘மயில் வீரன்’ எனக் குறிப்பிடுகின்றார்.

· இறைவனை முருகனாகவே காண்கிறார். வேல் முனையை தியானம் பண்ணிப் பாயவிட, மனதில் இருந்த அசுரர் கூட்டம் பறந்து போயிற்று என்கிறார்.


15) போகர்

· திருமூலரின் மாணாக்கரான காலங்கி நாதரின் மாணாக்கர் இவர்.

· போகர் ஏழாயிரம், போகர் திருமந்திரம், நிகண்டு பதினேழாயிரம் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

· மருத்துவர் பழஞ்சுவடிகளைப் போகரின் பெயரால் கூறுவதும் உண்டு.

· “போகர் நிகண்டு” மருத்துவம் பற்றி கூறும் நூல் ஆகும்.


16) உரோமமுனி சித்தர்

· இவருக்கு உடலெங்கும் உரோமம் மிகுந்து இருந்ததால் ‘உரோமமுனி’ எனப்பட்டார்.

· உரோம முனி ஞானம், உரோம முனி நூறு, உரோம முனி ஐந்நூறு, ஐம்புல நூல் ஆகியவை இவரது படைப்புகள்.


17) கருவூர்ச் சித்தர்

· கருவூரில் பிறந்தவர் ஆதலால் இவருக்குப் இப்பெயர் உண்டு.

· தஞ்சையில் ராஜராஜன் கட்டிய கோயிலில் சிவலிங்கத்தை இவர் நிறுவினார்.

· ராஜராஜன் கட்டிய கோயிலில் கருவூராருக்குச் சிலை உள்ளது.

· கருவூர் சித்தர் பூஜைக்குரிய விதிமுறைகளைப் பாடியுள்ளார்.


18) தேரையர்

· மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை அகற்றியதால் இவருக்கு இப்பெயர் வந்தது.

நோய் அணுகாவிதி

பதார்த்த குணசிந்தாமணி,

வைத்திய சிந்தாமணி

கலைஞானம்

முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link