fbpx
  • No products in the basket.

9.1. நாட்டுப்புறப்பாட்டு

கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியளித்து நற்பண்புகளை வளர்ப்பது கலைகளின் இயல்பாகும். மேலும் அவை தொன்மையான பண்பாட்டுக்கூறுகளையும் எடுத்துக்காட்டுகின்றன. அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம். அக்கலையைப் பற்றி அறிவோம்.

(கல்லூரி மாணவி மலர்விழி, அவளுடைய தம்பி அமுதன், நண்பர்கள் சையது, சாலமன் ஆகியோர் கைவினைப் பொருள்கள் கண்காட்சி அரங்குக்குள் நுழைகின்றனர்.)


அமுதன் :அடேயப்பா! எத்தனை அரங்குகள். எவ்வளவு அழகான பொருள்கள்... சையது : எல்லாவற்றையும் ஓடி ஓடிப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. மலர்விழி: அவசரம் வேண்டாம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இதோ இந்த மண்பாண்ட அரங்கை முதலில் பார்ப்போம்.


பொறுப்பாளர்: உலகின் பழமையான கலைகளுள் ஒன்றாகிய மண்பாண்டக்கலை அரங்கு உங்களை வரவேற்கிறது. சாலமன் : என்ன? உலகின் பழமையான கலைகளுள் ஒன்றா? பொறுப்பாளர்: ஆமாம். மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக் கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன என்பதைப் படித்திருப்பீர்களே. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன. இவை எல்லாம் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும்.


சையது: ஐயா, மண்பாண்டம் என்றால் பானை, சட்டி ஆகியவைதானே? பொறுப்பாளர்: இங்கே பாருங்கள். குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி என்று எத்தனை பொருள்கள் இருக்கின்றன பார்த்தீர்களா? இவைகளெல்லாம் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவை. குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இத்தகைய களிமண் கிடைக்கும். மலர்விழி: நல்ல களிமண் கிடைத்தால் உடனே பாண்டங்கள் செய்யத் தொடங்கிவிடலாம் அல்லவா?


பொறுப்பாளர்: அப்படி உடனே செய்துவிட முடியாது. பள்ளம் தோண்டி அதில் களிமண்ணை நிரப்பவேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்பு அதனுடன் குறிப்பிட்ட அளவில் மெல்லிய மணல், சாம்பல் ஆகியவற்றைக் கலந்து பக்குவப்படுத்த வேண்டும். இதுதான் பானை செய்யும் சக்கரம். இதனை நாங்கள் திருவை என்போம். திருவையை வேகமாகச் சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்துக் கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்களை உருவாக்குவோம். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்துக் காயவைப்போம்.

(அங்கிருக்கும் உதவியாளர் சக்கரத்தைப் பயன்படுத்தி மண்பானை செய்து காட்டுகிறார்.)


பொறுப்பாளர்: பானை செய்தலைப் பானை வனைதல் என்று சொல்வது மரபு. வனையப்பட்ட பானைகள் ஓரளவு காய்ந்ததும் தட்டுப்பலகையைக் கொண்டு தட்டிப் பானையின் அடிப்பகுதியில் இருக்கும் ஓட்டையை மூடிப் பானையை முழுமையாக்குவோம். பிறகு உருட்டுக்கல் கொண்டு தேய்த்துப் பானைகளை மெருகேற்றுவோம்.


அமுதன் : எங்கள் ஊரில் பாட்டி மண்பாண்டங்களில்தான் சமையல் செய்வார்.


பொறுப்பாளர்: மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு நல்ல சுவையுடன் இருக்கும். மேலும் உடல்நலத்திற்கும் நல்லது. மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். இப்போது மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால் இன்னும் திருவிழாக்களிலும், சமயச் சடங்குகளிலும் மண்பானைகளே பயன்பட்டு வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்ச்சிநிலைதான் சுடுமண் சிற்பக்கலை.


மலர்விழி :டெரகோட்டா என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அதுதானே?


பொறுப்பாளர்: ஆம். அதுவேதான். இந்த அரங்கின் அடுத்த பகுதிக்கு வாருங்கள். அவற்றைப் பார்க்கலாம்.

(அடுத்த பகுதிக்குச் செல்கின்றனர். அங்கு அழகான சுடுமண் சிற்பங்கள் பார்வைக்கு

வைக்கப்பட்டுள்ளன.)


சாலமன் :அடடா! எவ்வளவு சிற்பங்கள்! அமுதன்: இங்கு மனித உருவங்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்களும் உள்ளனவே!


பொறுப்பாளர்: ஆமாம். மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும். தமிழர்கள் பழங்காலத்தில் இருந்தே சுடுமண் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கியுள்ளனர். சுடுமண் சிற்பங்களுக்கு வண்ணங்கள் பூசுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும். பெரிய மாளிகைகளிலும் கலையரங்குகளிலும் இவைபோன்ற சுடுமண் சிற்பங்களை அழகுக்காக வைத்திருப்பார்கள். முன்பெல்லாம் சிற்றூர்களில் உள்ள கோயில்களில் மட்டுமே இவற்றைக் காண முடியும். இப்போது கலைப்பொருளாக அழகுக்காகப் பல இடங்களிலும் பயன்படுத்துகின்றனர்.


அமுதன்:எங்கள் ஊர்க் கோயிலில் இவைபோன்ற ஏராளமான குதிரைச் சிற்பங்கள் உள்ளன. எதற்காக அத்தனை சிற்பங்கள் உள்ளன?


பொறுப்பாளர்: மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் குதிரைச் சிற்பம் செய்து வைப்பதாக வேண்டிக்கொள்வது உண்டு. அப்படி வேண்டிக்கொண்டவர்கள் வைத்தவையாக இருக்கும்.


மலர்விழி:மண்ணால் உருவாகும் அழகிய கலைகளைப் பற்றிச் சிறப்பாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி ஐயா. நாங்கள் பிற கைவினைக்கலை அரங்குகளையும் பார்த்துவிட்டு வருகிறோம்.

(அவர்கள் அடுத்துள்ள மூங்கில்கலை அரங்கிற்குச் செல்கின்றனர். அவ்வரங்கின் பொறுப்பாளர்

அவர்களை வரவேற்கிறார்.)


மலர்விழி:மூங்கிலால் கூடைகளும் ஏணிகளும் மட்டும்தான் செய்வார்கள் என நினைத்திருந்தேன். என் எண்ணம் தவறு என்று இங்கு வந்தபிறகுதான் புரிகிறது.


பொறுப்பாளர்: உண்மைதான். மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன. இதோ பாருங்கள். மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் என எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன. சுருக்கமாகச் சொன்னால் பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப்பொருள் முதல் இறந்தவரை எடுத்துச்செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.


மலர்விழி:முன்பெல்லாம் திருமணத்தின்போது துணிகள், பழங்கள், பலகாரங்கள் முதலியவற்றை வைத்துக் கொடுப்பதற்குச் சீர்க்கூடைகளைப் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


பொறுப்பாளர்: ஆமாம். அதுமட்டுமல்லாமல் கடவுள் வழிபாட்டின்போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை முறத்தில் வைத்துப் படைக்கும் வழக்கமும் சில பகுதிகளில் இருந்தது. அவையெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டன.

(அவர்கள் அடுத்துள்ள கோரைப்பாய் அரங்குக்குச் செல்கின்றனர்)


சையது:பாய் என்பது படுக்கப் பயன்படுவது. அதில் வேறு என்ன சிறப்பு இருக்கிறது?


பொறுப்பாளர்: பாய்களில் பலவகை உண்டு. குழந்தைகளைப் படுக்கவைப்பது தடுக்குப்பாய், உட்கார்ந்து உண்ண உதவுவது பந்திப்பாய், உட்காரவும், படுக்கவும் உதவுவது திண்ணைப்பாய், திருமணத்துக்குப் பயன்படுத்துவது பட்டுப்பாய், இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்துவது தொழுகைப்பாய். இப்படிப் பலவகைப் பாய்கள் உண்டு. இங்கேயுள்ள பாய்களைப்பாருங்கள். முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பயன்பட்டதுகூடப் பாய்தான். இதனைப் புறநானூறு கூம்பொடு மீப்பாய் களையாது என்னும் அடியால் குறிப்பிடுகிறது.


மலர்விழி:திருமணத்திற்குப் பயன்படுத்தும் பட்டுப்பாய்களில் மணமக்கள் பெயர்கள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.


பொறுப்பாளர்: பெயர்கள் மட்டுமன்றிக் குத்துவிளக்கு, மயில், பூக்கள் போன்றவையும் வழிபாட்டுச் சின்னங்களும்கூடப் பாய்களில் இடம்பெறுவதுண்டு. பாய் பின்னுவதும் சிறந்த கலையே!

(அடுத்துப் பனையோலை அரங்கிற்குச் செல்கின்றனர்)


பொறுப்பாளர்: தம்பிகளே, பனையோலை என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?


அமுதன்:ஓலைச்சுவடிதான் நினைவுக்கு வருகிறது.


பொறுப்பாளர்: ஆம். பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் நமக்காகப் பாதுகாத்து வைத்திருந்தவை பனையோலைகள் அல்லவா? அதுமட்டுமல்லாமல் பனையோலைகளினால் பல வகையான பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பாருங்கள் . குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் எல்லாம் இருக்கின்றன. பனைமட்டையின் நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன.


மலர்விழி:பனைமரம் தோற்றத்தில் மட்டுமல்லாமல் பயன்தருவதிலும்கூட மிகவும் உயர்வான மரம்தான் போலிருக்கிறது.

(அடுத்துப் பிரம்புக்கலை அரங்கிற்குச் செல்கின்றனர்.)


பொறுப்பாளர்: பிரம்பினால் செய்யப்பட்ட பலவகையான பொருள்கள் இங்கே உள்ளன. வந்து பாருங்கள். இங்குக் குழந்தைகளுக்கான தொட்டில், பெரியவர்களுக்கான கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத்தட்டு, வெற்றிலைப்பெட்டி என வகைவகையான பொருள்கள் பிரம்பிலேயே உள்ளன.


மலர்விழி:பிரம்பு ஒரு தாவரம்தானே, அதனை எப்படி உலோகம்போல வளைத்துப் பொருள்களைச் செய்ய முடிகிறது?


பொறுப்பாளர்: அதுதான் பிரம்பின் சிறப்பு. முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவோம். சூடான பிரம்பை நட்டுவைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைப்போம். அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும். பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவோம். பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனவே, அதில் அமர்வதும் படுப்பதும் உடல்நலத்துக்கு நல்லது. மேலும் பிரம்புப் பொருள்கள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்


மலர்விழி:இந்தக் கண்காட்சிக்கு வந்ததன்மூலம் நாட்டுப்புறக் கைவினைக் கலைகளைப்பற்றிப் பல புதிய செய்திகளை அறிந்துகொண்டோம். மிகவும் நன்றி ஐயா.


பொறுப்பாளர்: இவை மட்டுமல்ல. மண் பொம்மைகள் செய்தல், மரப்பொம்மைகள் செய்தல், காதிதப்பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக்கொம்பினால் கலைப்பொருள்கள் செய்தல், சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்கள் உருவாக்குதல் என இன்னும் பலவகையான கைவினைக்கலைகள் உள்ளன. இவற்றைப்பற்றி அறிந்துகொண்டால் மட்டும் போதாது. இவைபோன்ற கைவினைப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உருவாக்கும் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் சுற்றுச்சூழலையும் மாசடையாமல் பாதுகாக்கலாம்.


மலர்விழி:அப்படியே செய்கிறோம் ஐயா.


தெரிந்து தெளிவோம்

பிரம்பு என்பது கொடி வகையைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் கலாமஸ் ரொடாங் (Calamus Rotang) என்பதாகும். இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும் , மண்குகைகளிலும் செழித்து வளரும். தமிழகத்தில் இப்போது இஃது அருகிவிட்டது. நமது தேவைக்காக அசாம், அந்தமான், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.


நாட்டுப்புறப்பாட்டு

சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியே நாட்டுப்புறப் பாடல்கள். இவை, நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள், உழைக்கின்றபோது களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகவும் தம் வாழ்வில் பெறும் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்காகவும் பாடப்படுகின்றன. இப்பாடல்கள், மக்களது உணர்வுகளையும் மனப்பதிவுகளையும் எத்தகைய புனைவுகளுமின்றி இயல்பாகப் பதிவு செய்கின்றன.

இப்பாடல்கள் காலத்தால் முந்தியவை என்றாலும் இன்றும் நம் வாழ்க்கையில் மண்ணின் மணம் மாறாமல் இசைத் தன்மையோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை நாடோடிப்பாடல், பாமரப்பாடல், மரபுவழிப்பாடல், ஏட்டிலெழுதாக் கவிதை, மக்கள்பாடல், பரம்பரைப்பாடல், நாட்டார்பாடல் என்று பல்வேறு பெயர்களில் மக்கள் அழைக்கின்றனர்.

மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப்பாடல்கள் தாலாட்டுப்பாடலாக, தெம்மாங்குப்பாடலாக, விளையாட்டுப்பாடலாக, கும்மிப்பாடலாக, ஒப்பாரிப்பாடலாக, தொழிற் பாடலாக, வழிபாட்டுப்பாடலாகப் பல்வேறு வடிவங்களில் எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வில்லிசை, பொம்மலாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆகிய நாட்டுப்புறக்கலை வடிவங்களில் நாட்டுப்புறப்பாடல் தன் ஆற்றலை வெளிக்காட்டுகிறது.


விறகொடிக்கும் பெண்

வேகாத வெயிலுக்குள்ளே - ஏ தில்லலோ லேலோ

விறகொடிக்கப் போற பொண்ணே - ஏ தில்லலோ லேலோ

காலுனக்குப் பொசுக்கலையோ - ஏ தில்லலோ லேலோ

கத்தாழ முள்ளு குத்தலையோ – ஏ தில்லலோ லேலோ

காலு பொசுக்கினாலும் - ஏ தில்லலோ லேலோ

கத்தாழ முள்ளு குத்தினாலும் - ஏ தில்லலோ லேலோ

காலக் கொடுமையாலே - ஏ தில்லலோ லேலோ

கஷ்டப்படக் காலமாச்சு – ஏ தில்லலோ லேலோ

கஷ்டப்பட்டுப் பாடுபட்டு – ஏ தில்லலோ லேலோ

கழுத்தொடிய சுமக்கும் பொண்ணே – ஏ தில்லலோ லேலோ

எங்கே போய் விறகொடிச்சி - ஏ தில்லலோ லேலோ

என்னசெய்யப் போற பொண்ணே - ஏ தில்லலோ லேலோ

காட்டுக்குள்ளே விறகொடித்து – ஏ தில்லலோ லேலோ

வீட்டுக்கத சொமந்து வந்து – ஏ தில்லலோ லேலோ

கால்ரூவாய்க்கு வெறகு வித்து – ஏ தில்லலோ லேலோ

கஞ்சிகண்டு குடிக்கணுமே - ஏ தில்லலோ லேலோ

நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளத்து உணர்வுகளை வடிகட்டாமல் அப்படியே கொட்டும் பாடல்கள். அதனால் அவற்றில் இயல்பான சொல்வளமும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பும் நிறைந்திருக்கும். அத்தகு பாடல்களுள் ஒன்று இது.


தாயை இழந்த மகள் பாடுவது

பூமியிலே விட்டாலே - என்

பொற்பாதம் நோகுமென்பாய்.

தரையிலே விட்டாலே - என்

தங்கக்கால் நோகுமென்பாய்.

மார்மேலே தொட்டி கட்டி – எனக்கு

மடிமேல் நடை பழக்கி,

தோள்மேலே தொட்டிகட்டி - எனக்குத்

துடைமேல் நடை பழக்கி

நெய் ஊட்டி வளர்த்த - உன்

நேசத்தை நான் மறவேன்

பால் ஊட்டி வளர்த்த -உன்

பாசத்தை நான் மறவேன்

கள்ள நிழலாச்சே - இனி எனக்குக்

கண்டவர்கள் தாயாச்சே

வேலி நிழலாச்சே - இனி எனக்கு

வேண்டியவர்கள் தாயாச்சே

குடத்தோடே தண்ணீர் - எனக்குக்

குளிரத்தான் வளர்த்தாலும்

தாய்வளர்த்த தண்ணீர்போல்

தாகந் தணியா தெனை.


தெரியுமா?

சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கவிதை நூல்கள்

1968 - வெள்ளைப் பறவை - அ. சீனிவாச ராகவன்

1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்

1982 - மணிக்கொடி காலம் – பி. எஸ். ராமையா

1999 - ஆலாபனை - அப்துல் ரகுமான்

2002 – ஒரு கிராமத்து நதி - சிற்பி. பாலசுப்பிரமணியம்

2004- வணக்கம் வள்ளுவ! - ஈரோடு தமிழன்பன்

2006 – ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு. மேத்தா

2009 – கையொப்பம் - புவியரசு

2017 - காந்தள் நாட்கள் - இன்குலாப்

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link