fbpx
  • No products in the basket.

8.1. மனோன்மணியம்

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது. இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும். நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த மனோன்மணீயம் என்னும் இந்நாடக நூல், காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது. இயற்கையில் ஈடுபாடுகொண்டு, அதனில் தோய்ந்து இணையில்லாத ஊக்கமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதைக் கூறுவதாக உள்ளது இந்நூல்.

சுந்தர முனிவர் தனது அறையிலிருந்து ஆசிரமம் வரை யாரும் அறியாவண்ணம் சுரங்கம் அமைக்கும் பணியை நடராசனுக்கு அளித்திருந்தார். நடராசனும் அப்பணியை ஓரளவு முடித்துவிட்டான். 'இன்னும் சிறுபகுதி வேலை ஆசிரமத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதுவும் இன்றிரவு முடிந்துவிடும்' என்று எண்ணிக்கொண்டு காலை வேளையில் ஊரின் புறமாக நடராசன் தனித்திருந்தான். அப்போது தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்.

மூன்றாம் அங்கம், இரண்டாம் களம்

இடம் : ஊர்ப்புறத்து ஒரு சார்

காலம் : எற்பாடு

நடராசன் (தனிமொழி)


இலக்கு வேண்டும்

காலையில் கடிநகர் கடந்து நமது

வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்

இன்று இரா முடிக்கினும் முடியும்; ....

எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை

இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு

வேண்டும்; உயிர்க்கு அது தூண்டுகோல் போலாம்.

ஈண்டு எப்பொருள்தான் இலக்கற்று இருப்பது?


புல்லின் பரிவு

இதோ ஓ! இக்கரை முளைத்த இச் சிறுபுல்

சதா தன் குறிப்பொடு சாருதல் காண்டி;

அதன்சிறு பூக்குலை அடியொன்று உயர்த்தி

இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை

நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்

பதமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து

ஆசுஇலாச் சிறுகாய் ஆக்கி, இதோ! தன்

தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே

"இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில்

தழைப்பதற்கு இடமிலை; சிறார் நீர் பிழைப்பதற்கு

ஏகுமின், புள் ஆ எருது அயத்து ஒருசார்

சிக்கிநீர் சென்மின்!" எனத்தன் சிறுவரைப்

புக்கவிட் டிருக்கும் இப் புல்லின் பரிவும்

பொறுமையும் புலனுங் காண்போர், ஒன்றையும்

சிறுமையாச் சிந்தனை செயாதுஆங்காங்கு

தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்

போற்றுதம் குறிப்பிற்கு ஏற்றதோர் முயற்சியும்

பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப,

ஆர்த்தெழும் அன்பினால் அனைத்தையுங் கலந்துதம்

என்பெலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பர்


வாய்க்காலின் விசித்திரம்

தமக்குஊண் நல்கும் வயற்குஉப யோகம்

எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்

செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ!

அலைகடல் மலையா மலையலை கடலாப்

புரட்டிட அன்றோ நடப்பதிச் சிறுகால்!

பார், இதோ! பரற்களை நெறுநெறென் றரைத்துச்

சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்

தன்வலிக்கு அடங்கிய மண்கல் புல்புழு

இன்னதென்று இல்லை; யாவையும் ஈர்த்துத்

தன்னுள் படுத்தி முந்நீர் மடுவுள்

காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்

சாலத் தகும் இவை எனஓர்ந்து உருட்டிக்

கொண்டு சென்று இட்டுமற்று "ஐயா,

அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச்

சென்றபின் பெருமலைச் சிகரம் முதலாக்

குன்றுவீழ் அருவியாய்த் தூங்கியும் குகைமுகம்

இழிந்தும் பூமியின் குடர்பல நுழைந்தும்

கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந்து ஓடியும்,

ஊறிடும் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்

ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்

மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்

பற்பல பாடுயான் பட்டங்கு ஈட்டியது

அற்பமே ஆயினும் ஆதர வாய்க்கொள்;

இன்னமும் ஈதோ ஏகுவன் எனவிடை

பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்

வந்து இவண் அடைந்து, மற்றும் இராப்பகல் மறந்து

நிரந்தரம் உழைக்கும் இந் நிலைமையர் யாவர்?

(நீரைக் கையால் தடுத்து)

நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்!

இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி

நீரே! நீரே! என்னை உன் நிலைமை?

யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்?

நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்

உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு என்னை?


நாங்கூழ்ப்புழுவின் பொதுநலம்

(நாங்கூழ்ப் புழுவை நோக்கி)

ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு

ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்!

உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்

உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ.

எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை

விடுத்தனை இதற்கா, எடுத்தஉன் யாக்கை.

உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய

விழுமிய சேறாய் வேதித்து உருட்டி

வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல

ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!

இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல்

எப்படி உண்டாம்? எண்ணாது உனக்கும்

குறும்புசெய் எறும்பும் கோடி கோடியாய்ப்

புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை ?

ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள?

(நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி)

விழுப்புகழ் வேண்டலை. அறிவோம், ஏனிது?

துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ!

எங்கும் இங்ஙனே இணையிலா இன்பும்

பங்கமில் அன்பும் தங்குதல் திருந்தக்

காணார் பேணும் வாணாள் என்னே?

அடிகள் 13-85

- மனோன்மணீயம் சுந்தரனார்

தமிழ் நாடக இலக்கண நூல்கள் சில

1. அகத்தியம் 2. குணநூல் 3. கூத்த நூல் 4. சந்தம் 5. சயந்தம்

6. செயன்முறை 7. செயிற்றியம் 8. முறுவல் 9. மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் 10. நாடகவியல்


நூல்வெளி

மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல். லிட்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' (The Secret Way) என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார். இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது. இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது களங்களையும் கொண்டது. நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை சிவகாமியின் சரிதம்'. பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855இல் பிறந்தார். திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link