fbpx
  • No products in the basket.

7.8. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

நூல் வெளி

குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ

பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும். குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.


இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - கழங்கு, அம்மானை, ஊசல்

சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும்; கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும். தொடக்கம் முதல் தமிழிலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய, இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது நாட்டுப்புறத்தமிழ்! குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது பிள்ளைத்தமிழ்!


ஆடுக செங்கீரை!

செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை*

செங்கீரைப் பருவம், பா.எண்.8


பாடலின் பொருள்

திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும்.

உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துக்களோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.


செங்கீரைப் பருவம்

செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.


அணிகலன்கள்

சிலம்பு, கிண்கிணி  -  காலில் அணிவது

அரைநாண்   -  இடையில் அணிவது

சுட்டி  -  நெற்றியில் அணிவது

குண்டலம், குழை  -  காதில் அணிவது

சூழி  -  தலையில் அணிவது

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image