fbpx
  • No products in the basket.

7.7. காவடிச் சிந்து

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம். முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர். அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.

காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று. உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.

கோயில் வளம்

சென்னி குளநகர் வாசன் - தமிழ்

தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்

செகமெச்சிய மதுரக்கவி

யதனைப்புய வரையிற்புனை

தீரன்; அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன் - குற

வள்ளி பதம்பணி நேசன் - உரை

வரமேதரு கழுகாசல

பதிகோயிலின் வளம்நான்மற

வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்

கோபுரத் துக்கப்பால் மேவி - கண்கள்

கூசப்பிர காசத்தொளி

மாசற்று விலாசத்தொடு

குலவும் புவி பலவும்.

நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத

நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே

நுழைவாரிடு முழவோசைகள்

திசைமாசுணம் இடியோ என

நோக்கும் படி தாக்கும்.

சந்நிதி யில்துஜஸ் தம்பம் - விண்ணில்

தாவி வருகின்ற கும்பம் - எனும்

சலராசியை வடிவார்பல

கொடிசூடிய முடிமீதிலே

தாங்கும்; உயர்ந் தோங்கும்

உன்னத மாகிய இஞ்சி-பொன்னாட்டு

உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக

உயர்வானது பெறலால் அதில்

அதிசீதள புயல்சாலவும்

உறங்கும்; மின்னிக் கறங்கும்.

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்

அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல

அடியார்கணம் மொழிபோதினில்

அமராவதி இமையோர்செவி

அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்

காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்

கனல் ஏறிய மெழுகாய்வரு

பவர் ஏவரும் இகமேகதி

காண்பார்; இன்பம் பூண்பார்.

- சென்னிகுளம் அண்ணாமலையார்.


பாடலின் பொருள்

சென்னிகுளம் என்னும் நகரில் வாழ்கின்ற அண்ணாமலைதாசன் ஆகிய நான் பாடிய உலகம் போற்றும் காவடிச்சிந்து என்னும் மதுரமான கவிமாலையைத் தன் மலைபோன்ற அகன்ற தோளில் சார்த்திக்கொள்கிறான் முருகன். அந்தக் கழுகுமலைத் தலைவன் முருகனின் கோவில் வளத்தை நான் சொல்கிறேன். கோவில் கோபுரத்தின் தங்கக் கலசம் தேவர் உலகை விட உயர்ந்து ஒளி வீசுகிறது. அவ்வொளி உலகங்கள் பலவற்றிலும் கண்கள் கூசும்படி பரவுகிறது. பெண்ணே ! கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது. காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்களின் செவியைச் சென்று அடைக்கிறது. கழுகுமலை நகரின்

கோட்டை உயரமானது. அதில் மேகங்கள் படிகின்றன. அவற்றிலிருந்து உருவாகும் மின்னல்கள் இருளைக் கிழிக்கின்றன. தமது நெஞ்சம் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கிக் கனலில் உருகிய மெழுகென முருகனை நோக்கி வரும் பக்தர்கள் அருளைப் பெறுவார்; இன்பம் அடைவார்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும். இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும். தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்; 18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார். இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image