fbpx
  • No products in the basket.

7.3. முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறியலாம்.

முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை.


· சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் மீது பாடப்பெற்ற இலக்கியம் முத்தொள்ளாயிரம்.

· ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

· மொத்த பாடல்கள் (3X300) 900, கிடைத்தவை 109 பாடல்கள்.

· 109 பாடல்களும், புறத்திரட்டு என்னும் நூலில் இருந்து திரட்டப்பட்டன

· இது விருந்து என்னும் தொல்காப்பிய வனப்பு வகையைச் சார்ந்தது.

· சேரன்   -  வில் கொடி  -  மரபுப்பெயர் கோதை

· சோழன் -  புலி கொடி  -  மரபுப்பெயர் செம்பியன்

· பாண்டியன் -  மீன் கொடி  -  மரபுப்பெயர் மாறன்


வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.


ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர். பிற்காலக் காப்பியங்களில் நாட்டுவளம் தவறாது இடம்பெற்றது. முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.


சேரநாடு

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.*


பாடலின் பொருள்

சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன. அதைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன. அட்டா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே.


சோழநாடு

காவல் உழவர் களத்து அகத்துப் போர் ஏறி

நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி நாடு.


பாடலின் பொருள்

நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை 'நாவலோ' என்று கூவி அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீது ஏறி நின்றுகொண்டு மற்ற வீரர்களை 'நாவலோ' என்று அழைப்பது போலிருந்தது. யானைப்படைகளை உடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது.


பாண்டியநாடு

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித்

திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு.


பாடலின் பொருள்

சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துகள் போலிருக்கின்றன. தரையில் உதிர்ந்து கிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன. பந்தல் போட்டதுபோல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன. முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம் மிக்கது.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link