fbpx
  • No products in the basket.

7.3. பேச்சுக்கலை

'வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்' என்று சொல்லக் கேட்டிருப்போம். பேச்சின் மூலம் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். தனிமனிதனின் தேவைக்கு மட்டுமல்லாமல் சமூகத்தின் தேவைக்கும் பேச்சுக்கலை அவசியமாகும். கருத்து வெளிப்பாட்டிற்கான பேச்சுமொழி, கலை வடிவமாக உருப்பெற்றுச் சமூகத்தின் மிக இன்றியமையாத அடையாளமாகவும் ஆளுமைத் திறனாகவும் வளர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவே

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்

வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

என்று ஒளவையார் பாடியுள்ளார். கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி, நூறுபேரில் ஒருவருக்கே கிடைக்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராகத் திகழ்வார். ஆனால், பத்தாயிரம் பேரில் ஒருவரே சிறந்த பேச்சாளராகத் திகழ்வார் என்று ஔவையார் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய ஆற்றல்வாய்ந்தது பேச்சுக்கலை.


பேச்சுக்கலையின் ஆற்றல்

பேச்சு, தனிமனிதனுக்குப் பயன்படுகிறது. பேச்சுக்கலை, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் பயன்படுகிறது. அது, மக்களின் வாழ்க்கை முறைகளையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தை வடிவமைக்க உதவுவது பேச்சுக்கலை ஆகும். உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் தங்கள் பேச்சாற்றலால் சமூகத்தில், அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

மன்னர் ஆட்சியை, ஏகாதிபத்திய ஆட்சியை, அந்நியர் ஆட்சியை, கொடுங்கோல் ஆட்சியை, முடியாட்சியை வீழ்த்தி மக்களாட்சியை மலரச்செய்த ஆற்றல் உடைய கலை "பேச்சுக்கலை" ஆகும்.

மக்களாட்சி, தேசியம், பொதுவுடைமை, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், விழிப்புணர்வு முதலான பண்புகள் ஒரு நாட்டில் வளர்வதற்குத் துணையாக இருப்பது மனிதனின் தனித்திறமை வாய்ந்த பேச்சுக்கலையாகும்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த உட்ரோ வில்சனிடம் நண்பர் ஒருவர், " நீங்கள் கால்மணி நேரம் சொற்பொழிவாற்ற எத்தனை நாள்கள் தயார் செய்வீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர், "இரண்டு வாரம்" என்றாராம். பிறகு, "ஒரு மணி நேரம் பேச ஒரு வாரம்" என்றாராம். பிறகு, "இரண்டு மணி நேரம் பேச வேண்டும் என்றால், எத்தனை நாள் தயார் செய்வீர்கள்?" என்று கேட்டதற்கு "இப்போதே பேசுகிறேன்" என்றாராம்.


பேச்சும் பேச்சுக்கலையும்

எண்ணத்தை வெளிப்படுத்த சைகை பயன்பட்டது. அழுகை, சிரிப்பு, அச்சம் முதலான உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயல்பாக எழுந்த ஒலிக்குறிப்புகள் ஒருவரின் எண்ணத்தையும் உணர்வையும் தெரிவித்தன. இனக்குழுக்களாக வாழ்ந்த மனிதச் சமூகம் பல நூற்றாண்டுகளாக ஒலியைத் தம் தேவைக்குப் பயன்படுத்தி வந்தது. அதன் பக்குவப்பட்ட வடிவமாகப் பேச்சுமொழி விளங்குகிறது.

அன்றாடம் பேசுவது பேச்சு. அது மக்களை ஈர்க்கும் கலையாவது பேச்சுக்கலை. பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை, உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும். மனிதர்களின் ஐம்புலன்களுக்கும் பணிகள் இருக்கின்றன. ஐம்புலன்களின் இயல்பான பணிகள் திறன் படைத்தாக மாறும்போது கலைசார்ந்ததாகச் செழிப்படைகின்றன. நாக்கு, சுவைத்தல் என்கிற பணியைச் செய்கிறது; பேசுவதற்கும் உதவுகிறது. அன்றாடத்தேவைக்கான பேச்சு இன்னும் கலைத்தன்மை சேர்ந்து பேச்சுக்கலையாகிறது. பேச்சில் அழகு, ஒழுங்கமைவு மற்றும் திறன்கள் இணையும்போது, அது கலை ஆகிறது. பேச்சு, கலைவடிவம் பெறுவதே பேச்சுக்கலையாகும். பேசுபவரின் திறன், மொழியின் திறன் இரண்டும் பேச்சுக்கலையின் அடிப்படைகளாகும். பேசுபவரின் ஒலிப்பு, பேச்சின் ஏற்ற இறக்கம், குரல்வளம் ஆகியவை பேசுபவரின் திறனாகும். அடுக்குமொழி, மரபுத்தொடர், கவிதை, பாட்டு, உரையாடல் ஆகியன மொழியின் வளங்களாகும். இவை சிறப்பாகப் பேசுவதற்கும் பேச்சானது, கலை வடிவம் பெறுவதற்கும் உதவுகின்றன. பேச்சும் மேடைப்பேச்சும் வெவ்வேறானவை.


பேச்சாளரின் பண்புகள்

கருத்துத்தெளிவு, சுருக்கம், தன்கருத்தில் என்றும் உறுதி, நூல்வழிக் கற்றது மட்டுமன்றித் தன்சுயசிந்தனைக் கருத்துகளை முன்வைத்தல், கேட்பவர்களுக்குப் புரியும் எளிய மொழிநடை, நகைச்சுவை உணர்வு, அவையறிந்து பேசுதல், நேரமறிந்து பேசுதல், உண்மையை மட்டுமே பேசுதல், சாதி, மத, மொழி, இன, தூண்டல்களும் வேறுபாடுகளும் இன்றிப் பேசுதல், பிறரது கருத்துகளை ஏற்கும் மனப்பான்மை, பிறரது நேரத்தை எடுத்துக்கொள்ளாமல், தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பேசி முடித்தல் போன்றவை பேச்சாளரின் தலைசிறந்த பண்புகளாகும்.


குரலும் மொழியும்

• குரல்வளம் சிறப்பாக இருந்தால் பேச்சின் நடைநலமும் சிறக்கும்.

• ஒரே குரலில் சீராகப் பேசுவது பார்வையாளருக்கு விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும்.

• பேசும் கருத்திற்கு ஏற்ற உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகப் பேச்சின் வெளிப்பாடு இருக்க வேண்டும். மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளோ, உணர்ச்சியற்ற பேச்சோ இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.

• உச்சரிப்பில் தெளிவும் பேச்சில் உரிய ஏற்ற இறக்கமும் அமைந்திருத்தல் அவசியம்.

. பேசும் மொழியைப் பிழையில்லாமல் ஒலிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். பிழையான ஒலிப்பு, பேச்சையும் பேச்சாளரையும் நகைப்புக்குள்ளாக்கிவிடும்.

• உச்சரிப்புப் பிழையின்மை, மொழியழகு, சொற்குற்றம் இன்மை, சொல்லாட்சித் திறமை ஆகியனவற்றையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். பேச்சாளருக்கான தகுதிகள்

. பேசும் இடம், பங்கேற்பவர்கள் எண்ணிக்கை, பேச வேண்டிய கருத்து என்பனவற்றில் கவனத்தோடு இருக்க வேண்டும்.

• பேச்சை ஆரம்பிக்கும் முன்னர் நம் சிந்தனையில் சரியெனப் பட்டவற்றை நன்றாகச் சிந்தித்துப் பேசவேண்டும்.

• அவையை உயிரோட்டமுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

• பொருத்தமான கேள்விகளையும் பதில்களையும் முன்வைத்தல், பொருத்தமான நிகழ்வுகளையும் கதைகளையும் தம் பேச்சில் கூறுதல் நல்லது.

• பேசும் கருத்துகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு தொடக்கம் முதல் இறுதிவரை பேச்சின் அமைப்பை ஒரே சீராகப் பேணுதல் வேண்டும்.

. ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சலிப்படையச் செய்யக்கூடாது.

• பேச்சை முடிக்கும்போது நாம் இதுவரை பேசிய பேச்சின் சுருக்கத்தைச் சொல்லி முடிப்பது சிறப்பு.

• பேசும் போது தேவையற்ற மெய்ப்பாடுகளையும் உடல் அசைவுகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

• பேச்சில் 'போலச்செய்தல்' என்பதைத் தவிர்த்துத் தனக்கெனத் தனித்துவமான ஒரு நடையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

• குறித்த நேரத்தில் பேச்சை ஆரம்பிக்கவும் முடிக்கவுமான பயிற்சியில் தேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

• பேசும்போது நம்முடைய பார்வையை அவையோர் அனைவரின் பக்கமும் செலுத்த வேண்டும்.

• பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகள், ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொண்டு, மேடையில் அச்சம், கூச்சமின்றிப் பேசுவதற்குப் பழக வேண்டும்.


பேச்சின் முக்கூறுகள்

முறைப்படுத்தப்பட்ட உழைப்பும், சிறந்த திட்டமிடலும் ஒருவரின் வெற்றிக்கு அணி செய்கின்றன. பேசும் பொருளை ஒழுங்கு முறைக்குக் கொண்டு வந்து தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப்பகுத்துப் பேசுவதையே பேச்சின் கூறுகள் என்கிறோம். இதனை எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனவும் கூறலாம்.


எடுத்தல்

பேச்சைத் தொடங்குவது எடுப்பு.தொடக்கம் நன்றாக இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினைக் குறித்த நல்லெண்ணம் தோன்றாது. சுருக்கமான முன்னுரையுடன் தொடங்க வேண்டும். தடங்கலின்றிப் பேச்சைத் தொடங்குவதே நல்ல அடித்தளமாகும். அவையோருக்கு வணக்கம் கூறி, சிறிய அறிமுகத்துடன் தொடங்க வேண்டும். அறிஞர்களின் மேற்கோள்கள், கவிதைவரிகள், ஆர்வத்தை ஏற்படுத்தும் செய்திகளோடு தொடங்கலாம். கேட்பவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதை மனத்திற்கொள்ள வேண்டும்.


தொடுத்தல்

தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும்முறை தொடுத்தல் எனப்படும். சொல்ல வேண்டிய கருத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்க வேண்டும். சிலர் பேசும்போது, என்ன தலைப்பில் பேச வந்தோம் என்பதையே மறந்து பேசிக்கொண்டிருப்பர்.

பேச்சு நன்றாக இல்லாவிட்டால் கேட்போரின் கவனம் சிதறிவிடும். பேச்சு கேட்பவர்களைக் கவர வேண்டும். பேச்சின் அடிப்படை, தெளிவாகப் பேசுதலாகும். ஆகையால் சொல் தெளிவும் கருத்துத் தெளிவும் மிக முக்கியமானவை. கருத்து, சுருக்கமாக இருக்கும்போது தான் பேச்சு சுவைக்கும்.

நாம் பேசும் பேச்சு, எளிமையான சொற்களைக் கொண்டதாகவும் பார்வையாளர்களின் ஆர்வம் குறையாமல் கருத்தைக்கொண்டு சேர்ப்பதாகவும் அமைதல் வேண்டும். மேலும் அது, கருத்தாழம் உடையதாகவும் தெளிவுடையதாகவும் கருத்து விளக்கமுடையதாகவும் அமையுமாயின் வெற்றியடையும்.

எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகுபடுத்துவதே அணி எனப்படும். கேட்போர் சுவைக்கத்தக்க உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியன அமையப் பேசுவதே சிறந்த பேச்சாகும்.

உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும். பேச்சாளர், தம் உணர்ச்சிப் பெருக்கில் பேசக்கூடாது. கேட்போரின் உள்ளத்தில் தாம் விரும்பும் உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் வேண்டும்.


முடித்தல்

பேச்சை முடிக்கும்போதுதான், பேச்சாளர் தமது கருத்தை வலியுறுத்தவும் கேட்போர் மனத்தில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும். பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக்கூறி முடித்தல், அறிஞர்களின் கருத்தைக்கூறி முடித்தல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன. சிறந்த பேச்சாளர் எப்படி முடித்தாலும் அது அழகாகவே இருக்கும்.


வடிவங்களும் வகைகளும்

பட்டிமன்றம், வழக்காடுமன்றம், சிறப்புரை, வரவேற்புரை, தொகுப்புரை, தலைமையுரை, ஏற்புரை, நன்றியுரை, சொற்பொழிவு, நகைச்சுவை மேடை, தொலைக்காட்சி விவாதமேடை, வானொலி உரை, அரசியல் பேச்சு, தொலைக்காட்சி உரை எனப் பலவகைகளையும் பல வடிவங்களையும் பேச்சுக்கலை கொண்டுள்ளது.


இலக்கியங்களில் பட்டிமன்றம்

தற்காலத்தில் 'பட்டிமன்றம்' என்று அழைக்கப்படுவது, முன்பு பட்டிமண்டபம்' என்று அழைக்கப்பட்டது. பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்பராமாயணம் முதலான நூல்களில் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில், "வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்" ( 5-102) எனவும் மணிமேகலையில் "பட்டி மண்ட பத்துப் பாங்கு அறிந்து ஏற்றுமின்"(1 -16) எனவும் குறிக்கப்பட்டுள்ளது. திருவாசகத்தில் "பட்டிமண்டபம் ஏற்றினை" (சதகம் -41) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. "பன்னஅரும் கலைதெரி பட்டிமண்டபம்" எனக் கம்பராமாயணத்திலும் வருகிறது. இதனால் கலைகளை ஆராயும் இடமே பட்டிமண்டபம் என்பது புலனாகிறது.

தற்காலத்தில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கும் வழக்காடுமன்றத்திற்கும் உள்ள வேற்றுமைகள் பின்வருமாறு:


மேடைப்பேச்சு நடை

பொதுவாக மேடைப்பேச்சில் கடின நடை, எளிய நடை, இலக்கிய நடை, அடுக்குமொழி நடை, கொச்சை நடை என ஐவகை நடைகள் உள்ளன.


பேச்சுக்கலையும் ஆளுமைகளும்

ஒரு பேச்சு எந்த மேடையில் நிகழ்த்தப்படுகிறதோ அந்த இடத்திற்கு மட்டுமே பொருத்தமாக இருந்தால், அது நல்ல பேச்சாக மட்டுமே இருக்கும். காலத்தை வென்று நிற்கும் சொற்பொழிவாக உயர முடியாது. எல்லா மக்களுக்கும் எல்லாக் காலத்துக்கும் ஏற்றுக் கொள்ளும்படியான உண்மைகளை உள்ளடக்கி, இலக்கிய நயங்கள் மிளிர அமைக்கப்பட்ட உரைகளே தலையாய சொற்பொழிவுகளாக நிலைத்து நிற்கின்றன.

பட்டிமன்றம் வழக்காடு மன்றம்

நடுவரும் இருதரப்பிலும் மூன்றுபேர் என்னும் எண்ணிக்கையில் கருத்துகளை முன்வைப்பர். இந்த எண்ணிக்கை நேரத்திற்கும் சூழலுக்கும் தக்கவாறு மாறலாம்.

பேசுபவரை நடுவர் மட்டுமே குறுக்கிட்டு, கருத்தைச்சொல்ல முடியும்.

ஒரு தலைப்பில் மூவர் கருத்துகளை முன்வைப்பர்.

இரு அணியின் கருத்துகளையும் கேட்டபின் அவற்றுள் ஏதேனும் ஓர் அணிக்கு ஏற்புடைய தீர்ப்பை வழங்கலாம்.

நடுவர் இருதரப்பு கருத்துகளையும் விடுத்துத் தன்கருத்தைத் தீர்ப்பாகக் கூறலாம்

நடுவரை நீதியரசர் என்போம். வழக்குத் தொடுப்பவர், மறுப்பவர் என மூவரைக் கொண்டு வழக்காடுவர்.

 

நடுவரும் வழக்கை மறுப்பவரும் வழக்குத் தொடுப்பவரைக் குறுக்கீடு செய்யலாம்.

ஒருவரே மூன்று நிலைகளில் வழக்கை முன்வைப்பர்.

நடுவர் நீதியரசராக இருப்பதால் முன்னுரையோ அடித்தளமோ கூறமாட்டார்.

 

வாதிடுகின்ற இருவரின் கருத்துகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார்

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link