fbpx
  • No products in the basket.

7.2. ஓவியம்

ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை. காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு. ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க ஓவியக்கலையைப் பற்றி அறிவோம்.

ஒரு விடுமுறை நாளன்று கண்ணனும் மணியும் அரசுப் பொருள்காட்சிக் கூடத்திற்குச் செல்கின்றனர். ஒவ்வோர் அரங்காகக் கண்டுகளித்தவாறே சென்று இறுதியில் ஓவியக்கூடத்தை அடைகின்றனர்.

மணி : கண்ணா அந்த அறிவிப்புப் பலகையைப் பார்.

அறிவிப்புப் பலகை

ஓவியங்களைத் தொடாமல் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஓவியங்களுக்குக் கீழே உள்ள பொத்தானை அழுத்தினால் ஓவியங்கள் உங்களுடன் பேசும்.

கண்ணன் : மணி! இங்குக் குகை போன்று வடிவமைக்கப்பட்ட பாறையில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. அந்தப் பொத்தானை அழுத்து. குகை ஓவியம் பேசுவதைக் கேட்போம்.

(மணி பொத்தானை அழுத்துகிறான்)

குகை ஓவியம் : நான்தான் குகை ஓவியம் பேசுகிறேன். பழங்கால மனிதர்கள் குகைகளில்தான் வாழ்ந்து வந்தனர். அங்குதான் அவர்கள் முதலில் ஓவியங்களை வரையத் தொடங்கினார்கள். செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக எங்களை வரைந்தனர். வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல் போன்ற காட்சிகள் வரையப்பட்டன. நாங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாக இருப்போம். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு எங்களுக்கு வண்ணம் தீட்டினர். எங்களை உற்று நோக்கினால் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளலாம். மணி : கண்ணா! இதோ இங்குள்ள சுவர் ஓவியத்தின் பொத்தானை அழுத்து.

(கண்ணன் பொத்தானை அழுத்துகிறான்.)

சுவர் ஓவியம் : மனிதர்கள் வீடுகட்டி வாழத் தொடங்கிய காலம் முதல் சுவர் ஓவியங்களாகிய எங்களை வரைந்து வருகின்றனர். அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் போன்றவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் எங்களைக் காணமுடியும். சித்தன்னவாசல் என்னும் ஊரில் எங்களைப் பார்த்திருப்பீர்கள். எங்களை எவ்வாறு வரைந்தனர் தெரியுமா? முதலில் ஆற்று மணலுடன் சுண்ணாம்பைச் சேர்த்துச் சுவரைச் சமப்படுத்துவர். சுவர் ஈரப்பதமாக இருக்கும்போது எங்களை வரைவர். சுவர் உலர்ந்தபிறகு எங்களை வரைவதும் உண்டு. தஞ்சைப் பெரியகோயிலில் சுவர் ஓவியங்களான எங்களை ஏராளமாகக் காணமுடியும். கருவறைச் சுற்றுச்சுவரிலும்

மண்டபங்களின் சுவர்களிலும் நாங்கள் அழகாகக் காட்சியளிக்கிறோம். நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக நாங்கள் வரையப்பட்டிருக்கிறோம்.

மணி : கண்ணா, வா! அதோ! அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்.

(கண்ணன் துணி ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான்.) துணி ஓவியம் : துணிகளில் ஓவியங்கள் வரையும் முறை பழங்காலம் முதலே வழக்கத்தில் இருந்துள்ளது. ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர். சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் எங்களைக் கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர். கண்ணன் : மணி, வா! அந்த ஓலைச்சுவடி ஓவியத்தைப் பார்ப்போம்.

(கண்ணன் ஓலைச்சுவடி ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான்)

ஓலைச்சுவடி ஓவியம் : ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாகவும் எங்களை வரைவார்கள். நாங்கள் பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருக்கிறோம். தற்காலத்தில் எங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திற்குச் சென்றால் எங்களைக் காணலாம்.

மணி: தாள்களில் ஓவியம் வரையும்போதே நாம் அழிப்பான்களைக் கொண்டு பலமுறை அழித்து அழித்து வரைகிறோம். ஒருமுறை எழுத்தாணியால் கீறிவிட்டால் திருத்தமுடியாத ஓலைச்சுவடிகளில் நம் முன்னோர் ஓவியம் வரைந்துள்ளனர். அவர்களின் திறமையை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

கண்ணன் : சரி, வா! செப்பேட்டு ஓவியம் என்ன சொல்கிறது என்று கேட்போம்.

(கண்ணன் செப்பேட்டு ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான்)

செப்பேட்டு ஓவியம் : முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம். அதைப்போல உளிகொண்டு வரைகோடுகளாக எங்களையும் வரைந்தனர். பொதுவாக நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் போன்றவையாக எங்களைக் காணலாம்.

கண்ணன் : அங்கே சில புதுமையான ஓவியங்கள் காணப்படுகின்றனவே! வா, சென்று பார்க்கலாம்.

மணி : தந்த ஓவியங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே! இவை யார் தந்த ஓவியங்களாக இருக்கும்?

(கண்ணன் தந்த ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான்) தந்த ஓவியம் : நாங்கள் யானைத் தந்தங்களின் மீது வரையப்பட்ட ஓவியங்கள். வயது முதிர்ந்து இறந்த யானையின் தந்தங்களின்மீது பலவகை நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியங்களாக எங்களை வரைவார்கள். எங்களைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும்.

கண்ணன் : வா! அங்கே உள்ள கண்ணாடி ஓவியங்களைப் பார்ப்போம்.

(கண்ணன் கண்ணாடி ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான்.) கண்ணாடி ஓவியம் : கண்ணாடிகள் முகம் பார்க்க மட்டும்தான் பயன்படும் என நினைத்திருப்பீர்கள். ஆனால், அழகிய வண்ண ஓவியங்களாகிய எங்களை வரையவும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். பலவகையான உருவங்கள், இயற்கைக் காட்சிகள் போன்றவைகளாக நாங்கள் வரையப்படுகிறோம். எங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.

மணி : அடடா, ஓவியங்களில்தான் எத்தனை வகைகள்! இதோ! இருபதாம் நூற்றாண்டு ஓவியங்கள் என்னும் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். அதோ! அங்கே நாம் இப்போது வரைவது போலத் தாள்களில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. வா, சென்று பார்க்கலாம்.

(கண்ணன் தாள் ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான்) தாள் ஓவியம் : தற்காலத்தில் பரவலான பயன்பாட்டில் இருப்பவர்கள் நாங்களே. கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் எனப் பலவகையான வடிவங்களில் நாங்கள் காணப்படுகின்றோம். கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை வரைகின்றனர்.

(கண்ணன் அருகிலிருந்த கருத்துப்பட ஓவியத்தின் பொத்தானை அழுத்துகிறான்.)

கருத்துப்பட ஓவியம் : அரசியல் கருத்துகளை எளிமையாக விளக்குவதற்கு நாங்கள் பயன்படுகிறோம். இந்தியா இதழில் பாரதியார்தான் தமிழில் அறிமுகப்படுத்தினார். இப்போது பெரும்பாலான இதழ்களில் நீங்கள் எங்களைப் பார்க்க முடியும். எங்களுடைய மற்றொரு வடிவமே கேலிச்சித்திரம் ஆகும். மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர்.

நவீன ஓவியம் : ஓவியக்கலையின் மிகப் புதுமையான வடிவமாக நாங்கள் விளங்குகிறோம். புதுமையான பார்வையில் புதிய கருத்துகள் வெளிப்படுமாறு எங்களை வரைகின்றனர். பார்வையாளர்களின் மனப்பான்மைக்கு ஏற்பப் பொருள் கொள்ளும் வகையில் கோடுகளாகவும் கிறுக்கல்களாகவும் நாங்கள் வரையப்படுகிறோம். பல வண்ணக் கலவைகளைக் கொண்டும் எங்களை வரைகின்றனர். மணி : இந்தக் கண்காட்சியின் மூலம் பலவகையான ஓவியங்களைப் பற்றி அறிந்து கொண்டோம்.

கண்ணன் : அதிலும் ஓவியங்களே நம்மோடு பேசியது மிகமிகச் சிறப்பாக இருந்தது. இந்த நாளை நம்மால் மறக்கவே முடியாது! நாமும் சிறந்த ஓவியங்களை வரைந்து பழகுவோம்.

தெரிந்து தெளிவோம்

ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓ வியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா. இவரது ஓவியமுறைகள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டையராஜு. நாட்காட்டி ஓவியங்களைப் பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link