fbpx
  • No products in the basket.

5.2. மணிமேகலை

மணிமேகலைப் பற்றி

· இந்நூல் ஐம்பெரும்காப்பியங்களுள் ஓன்று.

· கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக பிறந்த மணிமேகலையின் துறவு வாழ்க்கையை கூறும் நூல்.


மணிமேகலையின் சிறப்பு:

· காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியம்.

· பெண்ணின் பெயரால் அமைந்த முதற்காப்பியமான மணிமேகலை.

· பெண்ணின் பெருமையை பேசும் நூல்.

· சமய பூசலுக்கு வித்திட்ட நூல், துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்.

· தமிழின் முதல் சமயக்காப்பியம்.


மணிமேகலை பாடல்கள்:

· காதைகள் - 30

· முதல் காதை - விழாவிறைக்காதை ; இறுதிக் காதை - பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை

· காண்டப் பிரிவுகள் கிடையாது

· வரிகள் - 4755

· சமயம் - பௌத்தம்

· காலம் - கி .பி .இரண்டாம் நூற்றாண்டு


வேறு பெயர்கள்:

· இரட்டை காப்பியம்

· புரட்சிக் காப்பியம்

· மணிமேகலைத் துறவு

· பசிப்பிணி மருத்துவக் காப்பியம்

· அறகாப்பியம்

· கதை களஞ்சியக் காப்பியம்


ஆசிரியர் குறிப்பு

· ஆசிரியர் - மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்

· இயற்பெயர் - சாத்தனார்

· ஊர் - திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்

· காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

· பணி - கூலவாணிகம்

· சிறப்புப் பெயர்கள் - “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்”


முக்கிய கதாபாத்திரங்கள் :

கோவலன் மாதவியின் மகள்  -  மணிமேகலை

மனிமேகலை பிறந்த ஊர்  -  பூம்புகார்

மணிமேகலை மறைந்த ஊர்  -  காஞ்சிபுரம்

சமயவாதிகளிடம் உண்மை கேட்ட இடம்  -  வஞ்சி

மணிமேகலையை விரும்பிய அரசன்   -  உதயகுமாரன்

மணிமேகலையின் முற்பிறப்புக் கணவன் பெயர்  –  இராகுலன்

மணிமேகலையின் முற்பிறப்புப் பெயர்  –  இலக்குமி

மணிமேகலையின் தோழி  -  சுதமதி

புத்த சமய ஆண்துறவி  -  அறவண அடிகள்

கோவலனின் குலதெய்வம்  -  மணிமேகலை

மணிமேகலைத் தெய்வம் கொண்டு சென்ற தீவு  –  மணிபல்லவம்

மணிமேகலா தெய்வம் அளித்த வரங்கள்  -  3

வரங்கள்  -

பசியற்றிருக்கவும்,

விரும்பும் உருவம் எடுக்கவும்,

வான்வழிச் செல்லவும்

ஆகிய வரங்களை மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அருளியது.

அமுதசுரபி பெற உதவியது  -  தீவதிலகை

அமுதசுரபி முற்பிறவியில் இருந்தது  -  ஆபுத்திரனிடம்

ஆபுத்திரனிடம் வழங்கியது  -  சிந்தாதேவி தெய்வம்

மணிமேகலைக்கு முதன் முதலாக

அமுதசுரபியில் பிச்சை இட்டவள்  -  ஆதிரை

மணிமேகலை முதன் முதலில்

பசிநோயை போக்கியது  -  காயசண்டிகையின் பசிநோயை

மணிமேகலை தன உருவத்தை

மாற்றிக்கொண்டது  -  காயசண்டிகைப் போன்று

காயசண்டிகையின் கணவன்  -  காஞ்சனன்

உதயகுமாரனைக் கொன்றது  -  காஞ்சனன்

ஆதிரையின் கணவன்  –  சாதுவன்


மேற்கோள்கள்

· "உலகம் திரியா, ஓங்கு உயர் விழுச்சீர்ப்

பலர்புகழ் மூதூர்ப்"   -  மணிமேகலையின் முதல் வரி

· “அறமெனப் படுவது யாதெனிக் கேட்பின்

மறவா தீதுகோள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்”

· “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா

வனவிய வான்பொருள் செல்வமும் நில்லா”

· “கோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்

கோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்”

· “மாதவர் நோன்பும் மடவார் கற்பும்

காவலர் காவல் இன்றெனின் இன்றால்”

· “பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி”

· “வினையின் வந்தது வினைக்கு விளைவாது

புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது”

· “பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்க்கொடுத் தோரே”


விழாவறை காதை

மக்களின் வாழ்வில் பிறந்தது முதலாக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் விழா, தனக்கென ஒரு தனியிடம் பெறுகிறது. மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் நுழையும்முன் திகழ்கிறது. அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் விழாதான். அவ்வகையில் புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது. அவ்விழா நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமைகிறது மணிமேகலையின் விழாவறை காதை.

மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்

இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும்

சமயக் கணக்கரும் தந்துறை போகிய

அமயக் கணக்கரும் அகலா ராகிக்

கரந்துரு எய்திய கடவு ளாளரும்

பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்

ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்

வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்

(அடிகள் 11-18)


தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்;

பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து

முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்;

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்

பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;

கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்

மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்;

(அடிகள் 43-53)


தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்;

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;

பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்

செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்;

வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்

தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும்

நாலேழ் நாளினும் நன்கறிந்தீர் என –

ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்

களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்

(அடிகள் 58-72)


பாடலின் பொருள்

இந்திர விழாவைக் காண வந்தோர்

உயர்வு டைய புகார் நகரில் மெய்ப்பொருள் உணர்த்தும் உலகியல், தத்துவம், வீடுபேறு ஆகிய பொருள்களை அவரவர் இயற்கைத் தன்மைக்கு ஏற்ப விளக்குபவராகிய சமயவாதிகள் கூடியிருக்கின்றனர். தமது நெறியில் சிறந்தவராக விளங்கும் காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும் காலக்கணிதரும் கூடியிருக்கின்றனர். இந்நகரை விட்டு நீங்காதவராய்த் தம் தேவருடலை மறைத்து மக்கள் உருவில் வந்திருக்கும் கடவுளரும் கடல்வழி வாணிகம் செய்து பெரும் செல்வம் காரணமாய்ப் புகார் நகரில் ஒன்று திரண்டிருக்கும் பல மொழி பேசும் அயல் நாட்டினரும் குழுமியிருக்கின்றனர். அரசர்க்குரிய அமைச்சர் குழுவாகிய ஐம்பெருங் குழு, எண்பேராயத்தைச் சேர்ந்தவர்களும் அரசவையில் ஒன்று திரண்டிருக்கின்றனர்.


விழா முன்னேற்பாடுகள் பற்றி அறிவித்தல்

"தோரணம் கட்டிய தெருக்களிலும் குற்றமில்லாத மன்றங்களிலும் பூரணகும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு மற்றும் பலவகையான மங்கலப் பொருள்களை முறையாக அழகுபடுத்தி வையுங்கள். குலை முற்றிய பாக்கு மரத்தையும் வாழை மரத்தையும் வஞ்சிக்கொடியையும் பூங்கொடிகளையும் கரும்பையும் நட்டு வையுங்கள். வீடுகளின் முன் தெருத் திண்ணையில் வரிசை வரிசையாக இருக்கும் தங்கத் தூண்களிலே முத்து மாலைகளைத் தொங்கவிடுங்கள்.

விழாக்கள் நிறைந்த இம் மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள். துகில் கொடிகளையும் கம்புகளில் கட்டிய கொடிகளையும் பெரிய மாடங்களிலும் மாடங்களின் வாயில்களிலும் சேர்த்துக் கட்டுங்கள்.


பட்டிமண்டபம் ஏறுமின்

குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் மரங்கள் தாழ்ந்து நிழல்தரும் ஊர் மன்றங்களிலும் நல்லன பற்றிச் சொற்பொழிவாற்றுங்கள். அவரவர் சமயத்திற்கு உரிய உட்பொருளறிந்து வாதிடுவோர் பட்டிமண்டப முறைகளைத் தெரிந்து வாதிட்டுத் தீர்வு காணுங்கள்.


சினமும் பூசலும் கைவிடுக

மாறுபாடு கொண்ட பகைவர்களிடம் கூடக் கோபமும் பூசலும் கொள்ளாது அவர்களை விட்டு விலகி நில்லுங்கள். வெண்மையான மணல் குன்றுகளிலும் மலர் செறிந்த பூஞ்சோலைகளிலும் குளிர்ந்த ஆற்றிடைக்குறைகளிலும் மரக்கிளைகள் நிழல் தரும் தண்ணீர்த் துறைகளிலும் விழா நடைபெறும். அந்த இருபத்தெட்டு நாள்களிலும் தேவரும் மக்களும் ஒன்றுபட்டு மகிழ்வுடன் உலாவிவருவர் என்பதை நன்கு அறியுங்கள்."


வாழ்த்தி அறிவித்தல்

ஒளி வீசும் வாளேந்திய காலாட் படையினரும் தேர்ப்படையினரும் குதிரைப் படையினரும் யானைப் படையினரும் சூழ்ந்து வர, அகன்ற முரசினை அறைந்து, "பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் பெருகுவதாகுக" என வாழ்த்தி மேற்கண்ட செய்திகளை நகருக்கு முரசறைவோன் அறிவித்தான்.


தெரிந்து தெளிவோம்

ஐம்பெருங்குழு

1. அமைச்சர் 2. சடங்கு செய்விப்போர் 3. படைத்தலைவர்

4. தூதர் 5. சாரணர் (ஒற்றர்)


எண்பேராயம்

1. கரணத்தியலவர்

2. கரும விதிகள்

3. கனகச்சுற்றம்

4. கடைக்காப்பாளர்

5. நகரமாந்தர்

6. படைத்தலைவர்

7. யானை வீரர்

8. இவுளி மறவர்


அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல். (மணிமேகலை 25: 228 - 231)

தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்; பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம். இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது; பௌத்த சமயச் சார்புடையது. கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை.

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர். கூலவாணிகம் (கூலம் - தானியம்) செய்தவர். இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர். தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link