fbpx
  • No products in the basket.

5.1. சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் பற்றி :

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்

இந்நூல் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.

சிலம்பு காரணமாக விளைந்த கதை, ஆதலால் சிலப்பதிகாரம் என்றானது.

சிலப்பதிகாரம் அரசனையோ, தெய்வங்களையோ பாட்டுடை தலைவனாக கொள்ளாமல் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர்.


சிலப்பதிகார பாடல்கள் :

· காண்டங்கள்-3

· காதைகள்- 30

· வரிகள் - 5001 (இசைப்பாடல்)

புகார்க்காண்டம் -10 காதைகள்

மதுரைக்காண்டம் - 13 காதைகள்

வஞ்சிக்காண்டம் - 7 காதைகள்


சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்:

· உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

· முத்தமிழ்க்காப்பியம்

· நாடகக்காப்பியம்

· குடிமக்கள் காப்பியம்

· முதற்காப்பியம்

· நாடகக்காப்பிய நன்னூல்

· ஒற்றுமைக்காப்பியம்

· மூவேந்தர்காப்பியம்

· தமிழின் தேசியக்காப்பியம்

· புரட்சிக்காப்பியம்


ஆசிரியர் குறிப்பு:

ஆசிரியர்: இளங்கோவடிகள்

பெற்றோர்:  இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் - நற்சோணை

ஊர்:  சேர நாடு

காலம்: கி.பி. 2ம் நூற்றாண்டு

சமயம்: சமணம்

சிறப்புப் பெயர்: சமய வேறுபாடு கருத துறவி

தமையன்: சேரன் செங்குட்டுவன்


சிலப்பதிகார கதாபாத்திரங்கள் :

காப்பியத் தலைவன்  -  கோவலன்

காப்பியத் தலைவி  -  கண்ணகி

கணிகைகுலப் பெண்  -  மாதவி

கோவலனின் தந்தை  -  மாசாத்துவன்

கண்ணகியின் தந்தை  -  மாநாய்கன்

மாதவியின் தாய்  -  சித்ராபதி

கண்ணகியின் தோழி  -  தேவந்தி

மாதவியின் தோழி  -  வயந்தமாலா

மணிமேகலையின் தோழி  -  சுதமதி

கோவலனின் நண்பன்  -  மாடலன்

கோவலனின் முற்பிறப்புப் பெயர்  -  பரதன்

பாண்டிய மன்னன்  -  நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியனின் மனைவி  -  கோப்பெருந்தேவி

நடைபெறும் விழா  -  இந்திர விழா

சமணத்துறவி  -  கவுந்தியடிகள்


இதர முக்கியம் நிகழ்வுகள் :

மாதவி கோவலனுக்காக கொடுத்து

அனுப்பிய முதல் கடிதம் எடுத்துச்சென்றது  -  வயந்தமாலை

இரண்டாவது கடிதத்தை கோவலனிடம் கொடுத்தவன்  -  கோசிகாமணி

மதுரைக்கு கோவலன் கண்ணகியை அழைத்துச் சென்றவர்  -  கவுந்தியடிகள்

மதுரையில் கோவலன் கண்ணகிக்கு

அடைக்கலம் கொடுத்தவர்  -  மாதிரி(ஆய்ச்சியர்)

மாதிரி மகள்  -  ஐயை

கண்ணகியின் காற்சிலம்பு  -  மாணிக்கப்பரல்கள்

கோப்பெருந்தேவியின் காற்சிலம்பு  -  முத்துப்பரல்கள்

கோவலனை கள்வன் என கூறியவன்  -  பொற்கொல்லன்

இந்திர விழா  -  28 நாட்கள் நடைபெறும்

ஆடிமாதம்

வெள்ளிக்கிழமை

கண்ணகி மதுரையை

எரித்த நாள் (எட்டாம் நாள்)

திருமால் புகழப்படும் பகுதி  -  ஆய்ச்சியர் குரவை

முருகன் புகழப்படும் பகுதி  -  குன்றக்குரவை


சிலப்பதிகாரத்தில் 5 வகை மன்றங்கள் குறிப்பிடப்படுகின்றது

· தெய்வமன்றம்

· இலஞ்சி மன்றம்

· வெள் இடைமன்றம்

· பூத சதுக்க மன்றம்

· பாவை மன்றம்


வரி - இசைப்பாடல் ; வரி எட்டு வகை

· வேட்டுவ வரி -  பெண் கடவுள் காளியை பற்றி பாடுவது

· கந்துக வரி  -  பந்து விளையாடும் போது பாடுவது

· ஊசல் வரி  -  ஊஞ்சலாடும் போது பாடுவது : பாடப்படுபவன் - சேரன்

· அம்மானைவரி -  கழங்காட்டத்தின் போது பாடுவது :

பாடப்படுபவன் - பாண்டியன்

வள்ளைப்பாட்டு  -  நெல்குற்றும் போது பாடுவது:

வள்ளைப்பாட்டு – உலக்கைப்பாட்டு

ஆய்ச்சியர் குரவை -  கடவுள் கண்ணனைபற்றி பாடுவது :

குரவை என்பது 7 முதல் 9 பேர் காய் கோர்த்து ஆடுவது


11 வகை ஆடல் : மாதவி 11 வகை ஆடல் கற்றவள்

· அல்லி

· கொட்டி

· குடை

· குடம்

· பாண்டரங்கம்

· மல்லாடல்

· துடியாடல்

· கடையம்

· பேடு

· மரக்கால்

· பாவைக்கூத்து


முக்கிய பாடல் வரிகள்:

"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"

*"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் "

"உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்"

"திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்"

"யானோ அரசன்? யானே கள்வன்!"  -  பாண்டிய மன்னன் கூறியது

"காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?"  -  கண்ணகி கூறியது

"கள்வனோ அல்லன்; கருங்காயற்கண் மாதராய்!

ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்"

"கன்றிய கள்வன் கையது ஆகின்

"கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு" -  பாண்டிய மன்னன் கூறியது

"மண்தேய்த்த புகழினான்"

"ஐஅரி உண்கண் அழுது ஏங்கி"  -  கோவலன் கண்ணகியிடம் கூறியது

"புலவர் நாவிற் பொருந்திய பூங்கோடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி"

"போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றம்" - கண்ணகியின் சிறப்பு

"மணிமேகலை என வாழ்த்திய ஞான்று"

நிறைமதி வாள்முகம் கன்றியது - கோவலன் கண்ணகியிடம் கூறியது


சிலப்பதிகார பாடல்

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச்

சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது. கடலும், மலையும், கதிரும், நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ ? நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது.


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்

அங்கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்

- இளங்கோவடிகள்

வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!

மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த

வெண்குடை போல அருளை வழங்கும்

வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!

கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!

காவிரி நாடன் சோழனின் ஆணைச்

சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும்

கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!

வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!

கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும்

மன்னனைப் போல முகில்வழி சுரக்கும்

வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!


பாடலின் பொருள்

தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!

அச்சம்தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!


மருவூர்ப் பாக்கம்

சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது; மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது; கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத் தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச் சேர்ந்தவர். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக என்றதால் இளங்கோவடிகளும் 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்' என இக்காப்பியம் படைத்தார் என்பர்.

இன்று 'எங்கும் வணிகம் எதிலும் வணிகம்'! பொருள்களை உற்பத்தி செய்வதைவிட சந்தைப்படுத்துவதில்தான் உலக நாடுகளும் தொழில் முனைவோரும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இன்று நேற்றல்ல; பண்டைக் காலந்தொட்டே வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன! அவற்றுள் ஒன்றே மருவூர்ப்பாக்கக் காட்சி!


வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;*

காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,

மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,

பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு

ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;

கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்

மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்

துன்ன காரரும் தோலின் துன்னரும்

கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

பழுது இல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்

வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்

அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு

மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்

இந்திரவிழா ஊரெடுத்த காதை ( அடி 13-39)


பாடலின் பொருள்

புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இங்குப் பட்டு, முடி, பருத்தி நூல், இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் உள்ளன. இங்குப் பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் உள்ளன. மேலும் இவ்வீதிகளில் வேறு பலப்பல பண்டங்களின் விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில், பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர். மேலும் வெண்மையான உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகரும் இங்கு வணிகம் செய்கின்றனர்.

இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன. வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர். பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல்பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.

இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன. குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன.

இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறு சிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன. இவை அனைத்தும் குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து விளங்கப் பரந்து கிடந்தன.


தெரியுமா?

ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு

"சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்

கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா

வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்

திளையாத குண்டலகே சிக்கும்"

-திருத்தணிகையுலா.


பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் திருவரங்கம் மற்றும் உறையூர் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர். தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்; இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால்குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன. அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.

மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம்(சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.


உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்)

உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.

வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம். இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.


மாதவியின் நாட்டியப் பயிற்சி

பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை. அது நுட்பமான தன்மையையும் திறனையும் உள்ளடக்கியது. கலைகளில் நடனக் கலை தமிழர்களால் போற்றப்பட்டுக் கற்கப்பட்டது. நடனம் கற்பவர்கள், பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்வர். இது இன்றும் காணப்படுகிற ஒரு வழக்கம். கலை ஒரு சமூகத்தின் பண்பாடு, வரலாறு, அழகியல் போன்ற கூறுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அவ்வகையில் தமிழர் வாழ்வு முழுமையும் கலைகளால் நிறைந்ததாகக் காணப்படுகிறது.

----பெருந்தோள் மடந்தை

தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை

ஆடலும் பாடலும் அழகும் என்று இக்

கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்,

ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்

சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி (5 - 11)


பாடலின் பொருள்

மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள்.

ஆடல், பாடல், அழகு என்னும் இம் மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள். (வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள். அவளுடன் ஆடல் ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்).


நாட்டிய அரங்கின் அமைப்பு

எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு

புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக்

கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு

நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்

கோல் அளவு இருபத்து நால்விரல் ஆக,

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து

ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நால்கோல் ஆக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்

பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்

தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்து; ஆங்கு

ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்

கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து - ஆங்கு

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி

விருந்துபடக் கிடந்த அரும்தொழில் அரங்கத்துப்


பாடலின் பொருள்

திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைத்தனர். தம் கைப் பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம்

அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.

அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடையே, இடைவெளி நான்கு கோல் அளவாக இருந்தது. அரங்கின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஏற்ற அளவுகளுடன் இரு வாயில்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. மேற்கூறியபடி அமைக்கப்பட்ட அவ்வரங்கில் மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களை யாவரும் புகழும்படி சித்தரித்து வைத்தனர். தூண்களின் நிழலானது, அவையிலும் நாடக அரங்கிலும் விழாதபடி நல்ல அழகான நிலைவிளக்குகளை நிறுத்தினர்.

மேலும் , மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை, மேடையின் இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை, மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் கரந்துவரல் திரை, இவை மூன்றையும் சிறப்புடன் அமைத்தனர். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தையும் அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையாக, மேடையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்.


தலைக்கோல் அமைதி

பேரிசை மன்னர் பெயர்புறத்து எடுத்த

சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு,

கண்இடை நவமணி ஒழுக்கி, மண்ணிய

நாவல்அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கிக்

காவல் வெண்குடை மன்னவன் கோயில்

இந்திர சிறுவன் சயந்தன் ஆக என

வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல்

புண்ணிய நன்னீர் பொன்குடத்து ஏந்தி

மண்ணிய பின்னர், மாலை அணிந்து,

நலம்தரு நாளால், பொலம்பூண் ஓடை

அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு

முரசு எழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப,

அரைசொடு பட்ட ஐம்பெரும் குழுவும்

தேர்வலம் செய்து, கவிகைக் கொடுப்ப

ஊர்வலம் செய்து புகுந்து, முன் வைத்துஆங்கு


பாடலின் பொருள்

அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது, பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது. அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர். வெண்கொற்றக்

பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை. அது நுட்பமான தன்மையையும் திறனையும் உள்ளடக்கியது. கலைகளில் நடனக் கலை தமிழர்களால் போற்றப்பட்டுக் கற்கப்பட்டது. நடனம் கற்பவர்கள், பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்வர். இது இன்றும் காணப்படுகிற ஒரு வழக்கம். கலை ஒரு சமூகத்தின் பண்பாடு, வரலாறு, அழகியல் போன்ற கூறுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அவ்வகையில் தமிழர் வாழ்வு முழுமையும் கலைகளால் நிறைந்ததாகக் காணப்படுகிறது.

குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.

அத் தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர். பின்பு மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர். முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப் பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும். பின்பு அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்த பின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். இவ்வாறு மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.


மாதவியின் நாட்டியம் - மங்கலப் பாடல்

இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,

வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து

வலத் தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி

இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த

தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,

சீர் இயல் பொலிய, நீர்அல நீங்க,

வாரம் இரண்டும் வரிசையின் பாடப்

பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும்

கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்

இசைக்கருவிகள் ஒலித்த முறை

*குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்

தண்ணுமை நின்றது தகவே , தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே, முழவொடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை* (95 - 142)


பா வகை : ஆசிரியப்பா

பாடலின் பொருள்

அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அதன்பின்பு அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். அவ்வாறே ஆடலில் தேர்ச்சிபெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகேபோய் நின்றனர். நன்மை பெருகவும் தீமை நீங்கவும் வேண்டி, 'ஓரொற்றுவாரம்', 'ஈரொற்றுவாரம்' என்னும் தெய்வப்பாடல்களை முறையாகப் பாடினர். பின் அப்பாடலின் முடிவில் இசைப்பதற்கு உரிய இசைக் கருவிகள் அனைத்தும் கூட்டாக இசைத்தன.


இசைக்கருவிகள் ஒலித்த முறை

குழலின் வழியே யாழிசை நின்றது; யாழிசைக்கு ஏற்ப தண்ணுமையாகிய மத்தளம் ஒலித்தது; தண்ணுமையோடு இயைந்து முழவு ஒலித்தது; முழவுடன் இடக்கை வாத்தியம் கூடிநின்று ஒலித்தது. (இவ்வாறு அனைத்துக் கருவிகளும் இயைந்து இசைத்தன.)


மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்

பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென

நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்துக்

காட்டினள் ஆதலின், (143 - 145)

---காவல் வேந்தன்

இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்

தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி

விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு

ஒரு முறையாகப் பெற்றனள். (157-163)


மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்

பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப் பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.

மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள். அந்த ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து 'தலைக்கோலி' என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் 'பரிசு இவ்வளவு' என நூல் விதித்த முறைப்படி "ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை" மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.


தெரியுமா?

யாழின் வகைகள் 21 நரம்புகளைக் கொண்டது பேரியாழ் 17 நரம்புகளைக் கொண்டது மகரயாழ் 16 நரம்புகளைக் கொண்டது சகோடயாழ் 7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்

சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது 'குடிமக்கள் காப்பியம்' எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் 'மூவேந்தர் காப்பியம்' எனவும் அழைக்கப்படுகிறது. முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் 'புரட்சிக் காப்பியம்' எனப்படுகிறது; இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் முத்தமிழ்க் காப்பியம்' எனப்படுகிறது. செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனப்படுகிறது. மேலும், இந்நூல் 'பொதுமைக் காப்பியம்', 'ஒற்றுமைக் காப்பியம்', 'வரலாற்றுக் காப்பியம்' எனவும் அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் 'இரட்டைக் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' என்று பாரதி குறிப்பிடுகிறார். வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link