fbpx
  • No products in the basket.

4.7. பத்துப்பாட்டு

4.7. பத்துப்பாட்டு


பத்துப்பாட்டு என்பது பத்துப்பாடல்களால் ஆன ஒரு தொகுப்பு நூல் ஆகும். இதனைப் பத்து நூல்கள் என்று சொல்வதும் உண்டு. இத் தொகுப்பில் உள்ள பாடல்கள் (நூல்கள்)

· திருமுருகாற்றுப்படை

· பொருநராற்றுப்படை

· சிறுபாணாற்றுப்படை

· பெரும்பாணாற்றுப்படை

· கூத்தராற்றுப்படை (அல்லது) மலைபடுகடாம்

· முல்லைப்பாட்டு

· குறிஞ்சிப்பாட்டு

· மதுரைக்காஞ்சி

· நெடுநல்வாடை

· பட்டினப்பாலை

இவற்றை 1889ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அச்சு நூல் வடிவில் கொண்டு வந்தார்.


பத்துப்பாட்டில் உள்ள மொத்த அடிகள் 3552.

பத்துப்பாட்டில் மிகப் பெரியது மதுரைக்காஞ்சி (782 அடிகள்);

மிகச் சிறியது முல்லைப்பாட்டு (103 அடிகள்).

அனைத்தும் ஆசிரியப்பாவால் ஆனவை.


மதுரைக்காஞ்சி

மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கின், மதுரைக்காஞ்சி முதன்மையானது. இந்நூலில் மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன. காலை தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவது போன்ற வருணனைப் பாடல் இது.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள்

மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. இதைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்பர். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.


பாடல்

மதுரை மாநகர்

மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்

விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை

தொல்வலி நிலை இய, அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு

வையை அன்ன வழக்குடை வாயில்

வகைபெற எழுந்து வானம் மூழ்கி

சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்

ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்

பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப

மாகால் எடுத்த முந்நீர் போல

முழங்கிசை நன்பணை அறைவனர் நுவல

கயம் குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை

மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து

(அடிகள் 351-365)

மண்வரை ஆழ்ந்த தெளிந்த அகழி,

விண்ணை முட்டும் கற்படை மதில்கள்,

தொன்மை உடைய வலிமை மிக்க

தெய்வத் தன்மை பொருந்திய நெடுவாசல்,

பூசிய நெய்யால் கறுத்த கதவுகள்,

முகில்கள் உலவும் மலையொத்த மாடம்,

வற்றாத வையைபோல் மக்கள் செல்லும் வாயில்,

மாடம் கூடம் மண்டபம் எனப்பல

வகைபெற எழுந்து வானம் மூழ்கி

தென்றல் வீசும் சாளர இல்லம்,

ஆற்றைப் போன்ற அகல்நெடும் தெருவில்

பலமொழி பேசுவோர் எழுப்பும் பேச்சொலி,

பெருங்காற்று புகுந்த கடலொலி போல

விழாவின் நிகழ்வுகள் அறையும் முரசு,

நீர்குடைந்ததுபோல் கருவிகளின் இன்னிசை,

கேட்டோர் ஆடும் ஆரவார ஓசை,

ஓவியம் போன்ற இருபெரும் கடைத் தெருக்கள்.


பாடலின் பொருள் : மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது. பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. அவ்வாயில் நெய்பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது. மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன. இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப்போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.

மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக்கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன. ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன. விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலிபோல் ஒலிக்கிறது. இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுகிறது. அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.


தெரியுமா?

"பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியொடு குழும" (மதுரைக்காஞ்சி 673 - 677அடிகள்) என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்.

பத்துப்பாட்டு ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார்


சிறுபாண் ஆற்றுப்படை

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல். பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் இப்பாடப்பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

ஈகைப்பண்பு மனிதத்தின் அடையாளமாக இருக்கிறது. கொடுக்கிற பண்பு இருந்தால் எடுக்கிற நிலை இருக்காது. தமிழ் இலக்கியங்கள் : கொடைத்தன்மையை வியந்து போற்றுகின்றன; எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்கும் தன்மையை வலியுறுத்துகின்றன; கொடுப்பதில் மகிழ்ச்சி காணும் பண்பைப் போற்றுகின்றன. ஆற்றுப்படை இலக்கியங்கள் : இக்கொடை பண்பை விளக்கும் இலக்கியங்களாக இருக்கின்றன. இன்றளவும் கொடைப் பண்பால் பெயர்பெற்றிருக்கிற வள்ளல்கள் எழுவர் பற்றிய பதிவுகள் கொடைக்கு இலக்கணமாகவும் மனிதத்தின் அடையாளமாகவும் அமைந்திருக்கின்றன.


பேகன் – (பொதினி மலை)

வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும் ... (84-87)


பாரி (பறம்பு மலை)

....... சுரும்பு உண

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்குவெள் அருவி வீழும் சாரல்

பறம்பின் கோமான் பாரியும் ... (87-91)


காரி (மலையமான் நாடு)

........ கறங்குமணி

வாலுளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த

அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்

கழல்தொடித் தடக்கைக் காரியும் ... (91-95)


ஆய் (பொதியமலை)

....... நிழல் திகழ்

நீலம், நாகம் நல்கிய கலிங்கம்

ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவந் தாங்கிய, சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்; ... (95-99)


அதிகன் (தகடூர்)

........ மால்வரைக்

கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி

அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த

உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

அரவக் கடல் தானை அதிகனும் ... (99-103)


நள்ளி (நளிமலை)

........... கரவாது

நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழைபொழியும்வளிதுஞ்சுநெடுங்கோட்டு

நளிமலை நாடன் நள்ளியும் ... (103-107)


ஓரி (கொல்லிமலை)

............... நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்

குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த

காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

ஓரிக் குதிரை ஓரியும் ... (107-111)


இவர்களோடு நல்லியக்கோடன்.

.......... என ஆங்கு

எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள்

எழுவர் பூண்ட


பாடலின் பொருள்

பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்குப் பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தான். இவன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவன்; பெரிய மலை நாட்டுக்கு உரியவன்; வலிமையும் பெருந்தன்மையும் வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடுவழியில், மலர்களையுடைய (கொம்பின்றித் தவித்துக்கொண்டிருந்தது) முல்லைக்கொடியொன்று பற்றிப்படரத் தான் ஏறிவந்த பெரிய தேரினை ஈந்தவன் பாரி. அவன், வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்.


உலகம் வியக்கும்படி வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவன் காரி என்னும் வள்ளல். இவன், பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன்; தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன்.


ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவன், ஆய் என்னும் வள்ளல். இவன் வில் ஏந்தியவன்; சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவன்; ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவன்.


நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நெல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் தன்மையுடையது. அது தனக்குக் கிடைக்கப் பெற்றபோது, அதனை (தான் உண்ணாமல்) ஔவைக்கு வழங்கியவன் அதிகன் என்னும் வள்ளல்; வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவன் : கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவன் .


நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன். இவன் காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன்; போர்த் தொழிலில் வல்லமையுடையவன்;

மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.

செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். இவன் காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன்; ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவன்.

மேலே குறிப்பிட்ட ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர்; ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவன்.


கடையெழு வள்ளல்களும் - ஆண்ட - நாடுகளும்

பேகனின் ஊரான ஆவினன்குடி 'பொதினி - என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி - எனப்படுகிறது. பழனி மலையும் அதைச் - சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும்.


பாரியின் நாடு பறம்பு மலையும், அதைச் = சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். - பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது - பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை * சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் - சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.


காரியின் நாடு (மலையமான் திருமுடிக்காரி) = மலையமான் நாடு என்பதாகும். இது மருவி 'மலாடு' எனப்பட்டது. இது விழுப்புரம் - மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் = அமைந்துள்ள திருக்கோவிலூரும் - (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள - பகுதிகளுமாகும்.


ஆய் நாடு (ஆய் அண்டிரன்) - பொதிய மலை - எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.


அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி) 'தகடூர்' என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள 'பூரிக்கல்' மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஔவையாருக்கு அதிகமான் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.


நள்ளியின் நாடு (நளிமலை நாடன்) நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் 'ஊட்டி' என்று கூறப்படுகிறது.


ஓரியின் நாடு (வல்வில் ஓரி) - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 'கொல்லி மலையும்' அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.


ஓய்மா நாட்டு நல்லியக்கோடனது நாடுதிண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.


தெரியுமா?

முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. இஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டதேயாகும். இச்செயலே இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகிவிட்டது. இதையே, பழமொழி நானூறு, அறிமடமும் சான்றோர்க்கு அணி என்று கூறுகிறது. புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல் குமணன். இவன் முதிர மலையை (பழனி = மலைத்தொடர்களில் ஒன்று) ஆட்சி செய்த குறுநில மன்னனாவான். தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தான். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, "தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு" கேட்டுக் கொண்டான். இதனால் இவன் 'தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல் என்று போற்றப்படுகிறான். புறநானூறு 158 - 164, 165 - ஆகிய பாடல்களிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.


சிறுபாணன் பயணம்

நல்லூர் (சிறுபாணன் பயணம்தொடங்கிய இடம்)

8கல்

எயிற்பட்டினம் (மரக்காணம்)

12 கல்

வேலூர் (உப்பு வேலூர்)

11 கல்

ஆமூர் (நல்லாமூர்)

6கல்


கிடங்கில் (திண்டிவனம்) (சிறுபாணன் பயணம் முடித்த இடம்)

- மா. இராசமாணிக்கனார், : பத்துப்பாட்டு ஆராய்ச்சி :


மலைபடுகடாம்

நூல் வெளி பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று 'மலைபடுகடாம்'. 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.

ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை

பண்டைத் தமிழர்கள் பண்பில் மட்டுமன்றி, கலைகளிலும் சிறந்து விளங்கினர். அன்று கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர். அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர். அவ்வகையாக விருந்தோம்பிய தன்மையைக் காட்சிப்படுத்துகிறது தினைச்சோற்று விருந்து.


அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே,

நும் இல் போல நில்லாது புக்கு,

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

அடி : 158 – 169


பாடலின் பொருள்

நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.

"பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள் ; எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்; சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், 'பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்' என்று சொல்லுங்கள்.

அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம்தீர இனிய சொற்களைக் கூறுவர். அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்."


 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link