fbpx
  • No products in the basket.

4.4. குறுந்தொகை

4.4. குறுந்தொகை


குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.


எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது; கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது. இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை. 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார். நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் ஆகும். இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ '. இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்; கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ' என அழைக்கப் பெற்றார்.


'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று மனிதம் பேசிய சங்கக் கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்வன. அவற்றுள் ஒன்றான குறுந்தொகை ஓர் நுழையும்முன் அக இலக்கிய நூலாகும்; அதன் சிறப்புக் கருதியே 'நல்ல குறுந்தொகை' என்று அழைக்கப்படுகிறது; குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக்காட்டுவன. தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைத் துடைக்கத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த ஒரு பாடல் மனிதத்தை உணர்த்துகிறது.


பாடல்

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி அவர் சென்ற ஆறே. (37)

பாடல்

பேரன்பு உடையவன் பெரிதுனக்குத் தருவான்

பொருள்தேடச் சென்றவன் பறந்தோடி வருவான்

பசித்தீ அணைக்க மெல்லிய யாமரக்

கிளையொடித்து உதவும் யானைக் காட்சியே

உன்நினைவு தூவி இங்கவனை அழைத்துவரும்

மலரினும் மெல்லியளே மனக்கவலை கொள்ளாதே


திணை: பாலை


துறை:தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.


பாடலின் பொருள்: தோழி தலைவியிடம், "தலைவன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவன். அவன் மீண்டும் வந்து அன்புடன் இருப்பான். பொருள் ஈட்டுதற்காகப் பிரிந்து சென்ற வழியில், பெண் யானையின் பசியைப் போக்க, பெரிய கைகளை உடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய 'யா' மரத்தின் பட்டையை உரித்து, அதிலுள்ள நீரைப் பருகச்செய்து தன் அன்பை வெளிப்படுத்தும்" (அந்தக் காட்சியைத் தலைவனும் காண்பான்; அக்காட்சி உன்னை அவனுக்கு நினைவுபடுத்தும். எனவே, அவன் விரைந்து உன்னை நாடி வருவான். வருந்தாது ஆற்றியிருப்பாயாக) என்று கூறினாள்.

இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது.


பாடல்

அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புவதையும் இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டார் முனைவதையும் அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகை இப்பாடல்வழிக் காட்சிப்படுத்துகிறது.


அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்

நன்றுநன் றென்னும் மாக்களோடு

இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே.* (146)

- வெள்ளிவீதியார்


பாடல்

தோழி, நீ வாழி! நானறிய ஒன்று சொல்.

(உன் இதயம் உள்ளவன் தான் முயன்று தேடி)

இன்று கொடுத்த ஈடிலாப் பரிசம்

நன்று நன்றென நம்மூர்ப்

பொது அவையில் சொன்ன

முதுபெரும் சான்றோர்போல்

பிரிந்தோரைச் சேர்ப்போர் இருந்தாரோ அன்றும்.


திணை:குறிஞ்சித்திணை


துறை:தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர்பால் மணம் பேசி வர விடுப்ப, தன் தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, "தலைவன் வரைவை நமர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக" என்று தோழி கூறியது.


துறை விளக்கம்: தலைவன் தலைவியை மணம் முடிப்பது பற்றிப் பேச, சான்றோரை அனுப்புகிறான். தலைவி, அப்போது எங்கே தன் பெற்றோர் மணம் பேச மறுத்துவிடுவார்களோ என்று கலங்குகிறாள். இந்நிலையில் தோழி அவளிடம் தலைவனின் தரப்பைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர் என்று தேற்றுகிறாள்.


பாடலின் பொருள்: (ஊர் மக்களின் அவையில் முன்பு பலமுறை தலைவனின் பரிசப் பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன.) "தலைவி! இன்றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகத்தலைவன் (போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசப் பொருட்களைக் கொண்டுவந்து அவைமுன் வைத்துள்ளான்) மணம் பேசச் செய்துள்ளான். அவையில் இருந்த தலைவியின் உறவினரும் கண்டு, 'நன்று நன்று' என்று கூறி மகிழ்ந்தனர். நம் முடைய ஊரில் முன்பெல்லாம் பரிசத்தொகை போதவில்லை என்பதற்காகப் பிரித்துவிடப்பட்ட தலைவன் தலைவியரைச் (போதிய பரிசத்தொகை கிடைத்தவுடன்) சேர்த்து வைப்போர் இருந்தனர்தானே?" என்று தோழி கூறுகிறாள். இப்பாடல் நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link