fbpx
  • No products in the basket.

4.3. நற்றிணை

4.3. நற்றிணை


நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும்; 'நல்ல திணை என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது. இது, நானூறு பாடல்களைக் கொண்டது 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். போதனார்: சங்ககாலப் புலவர். நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார். நற்றிணையின் பேரெல்லை 12 அடி.விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.

வளமையும் வறுமையும் வாழ்க்கையென்னும் நாணயத்தின் இருபக்கங்களாகும். வறுமையில் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது கல்வி. இம்மாண்பு சிலருக்கு இயல்பிலேயே கைகூடும். வளமான மனையில் பிறந்த பெண்ணொருத்தி, குறைந்த வளமுடைய தலைவன் வீட்டிலும் தன்னிலை மாறாது வறுமையிற் செம்மையாய் வாழ்கின்ற காட்சியைப் படம் பிடிக்கிறது நற்றிணையின் இப்பாடல்.


தொகுப்பித்தோன் :- பன்னாடு தந்த மாறன் வழுதி

தொகுத்தோன் :- அறியப்படவில்லை

400 பாடல்கள்.

385ம் பாடல் பிற்பகுதி மறைந்தது.

234ம் பாடல் என ஐயுறுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.

56 பாடல்களின் ஆசிரியர் அறியப்படவில்லை.

192 புலவர்களால் பாடப்பெற்றது.


பாடல்

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்

உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று

அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்

பரீஇ மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே. (110)

- போதனார்


திணை:பாலை துறை : மகள் நிலை உரைத்தல்


கூற்று :தலைவி இல்லறம் ஆற்றும் செவ்வியைப் பாராட்டிச் செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது.


கூற்று விளக்கம்:திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்றுவந்த செவிலி, நற்றாயிடம் மகள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதைச் சொல்லி, இத்தகைய இல்லற அறிவை எப்படிப் பெற்றாள் என வியந்து கூறுதல்.


பாடல்

தித்திக்கும் தேனும் பாலும்

பொற்கிண்ணத்தில் கலங்க

ஒருவாய் சுவைக்கவும் ஒவ்வாமை காட்டி

முத்துப் பந்தலில் ஓடி விளையாடி

மூச்சிறைக்க வைத்த செல்லச் சிறுமகள்

மலர்ச்செண்டும் தோற்க வளமனை சாடி

மறுகை மறுத்து மறைவாள் அன்று

இன்றோ

ஒருநேர உணவே அமிழ்தென நுகரும்

பெருந்தனப் பாங்கு பெற்றது எங்கே?

இல்லவன் செல்வத்து இருப்புக்கு ஏற்ப

பிறரை நயவாப் பொருளியல் பெருமிதம்

பேரறிவு ஒழுக்கம் பெற்றது எப்படி?


துறை விளக்கம்: "மகள் நிலை உரைத்தல்" என்பது தலைவனோடு உடன்போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது. இத்துறை "மனைமருட்சி" என்றும் கூறப்படும்.


பாடலின் பொருள்: "நம் வீட்டில் தேன் கலந்த இனிய பால் உணவை ஒளிமிக்க பொற்கலத்தில் இட்டுச் செவிலித்தாயர் ஒரு கையில் ஏந்தி வருவர். நம் மகளை உண்ண வைப்பதற்காக இன்னொரு கையில் பூச்சுற்றிய மென்மையான சிறு கோலை வைத்திருப்பர். வீட்டின் முற்றத்தில் பந்தரின்கீழ் 'இதை உண்பாயாக' எனச் செல்லமாக அக்கோலால் அடித்து வேண்டுவர். மகளோ, 'நான் உண்ணேன்' என மறுத்து முத்துப்பரல்கள் இட்ட பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள். செவிலித்தாயர் அவளைப் பின்தொடர முடியாமல் நடை தளர்ந்து நிற்பர். இப்படிப்பட்ட விளையாட்டுப் பெண், நம் மகள். இவள் எப்படி இப்போது இத்தகைய அறிவையும் இல்லற நடைமுறையும் கற்றாள்? தான் மணந்துகொண்ட கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும் தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி நினைத்துப் பாராள். ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பதுபோல் ஒரு பொழுது இடைவெளி விட்டு ஒரு பொழுது உண்ணும் வன்மை பெற்றிருக்கிறாள். இது என்ன வியப்பு?"

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link