fbpx
  • No products in the basket.

4.2. அகநானூறு

4.2. அகநானூறு


அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை

களிற்றியானை நிரை(1-120),

மணி மிடை பவளம் (121-300),

நித்திலக் கோவை (301-400)

என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.

ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

இந் நூலின் முதல் 90 பாடலுக்கு பழைய உரை உள்ளது. முழுமையாக நாவலர் வேங்கடசாமி நாட்டரும், கரந்தை கவியரசு வெங்கடாசலம் பிள்ளையும் உரை வரைந்துள்ளனர்.

பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் : அகநானூறு. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானைநிரையில் 120, மணிமிடை பவளத்தில் 180, நித்திலக்கோவையில் 100 எனப் பாடல்கள் உள்ளன. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்; நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இவரின் பாடல்கள் : எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.


பாடல்

பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!

இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்,

போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து

அறன் நெறி பிழையாத் திறன்அறி மன்னர்

அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்

கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும்

மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்

கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென

மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்

பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்

தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்,

அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,

குறமகள் காக்கும் ஏனல்

புறமும் தருதியோ? வாழிய, மழையே!


(அகம்.188) - வீரை வெளியன் தித்தனார்


திணை :குறிஞ்சி துறை: இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.


பாடல்

பெருங்கடலில் நீர்முகக்கும் முகிலே சொல்நீ

வான்வெளி இருளப் பரபரப்பாய் வரும் உலா

போர்க்கள முரசாய்ப் பொழுதுக்கும் இடிமுழக்கம்

அறநெறியாளன் ஆட்சியில் காக்கும்

போர்க்கள வீரர் வாள்போல் பொறிமின்னல்

நாளும் இவையெல்லாம் சும்மா நடிப்பா?

அல்லது

ஆளை அலைக்கழிக்கும் மழை ஆரவாரமா?

பொன்பூ வேங்கை மாலை தொடுத்து

அணியும் தோழியர் ஆயத்துடன் இருப்பாள்

அழல்எரி அசோகஇலை ஆடை உடுப்பாள்

காண்பதற்கு இனிய ஒயிலுடன் நடப்பாள்

தழலை தட்டைக் கருவியொலி எழுப்பிப்

பறவைகள் விரட்டித் தினைப்புனம் காப்பாள்

தலைவியின் காட்டிலும் பொழிவாயா?

இல்லை

தப்பிப் பிழைத்துப் போய்விடுவாயா?


பாடலின் பொருள்: தலைவனுக்குக் குறியிடம் சொல்லும் தோழி மேகத்திடம் சொல்வதுபோல் சொல்கிறாள்: "பெருங்கடலில் நீரை முகந்துகொண்டு செல்லும் மேகக் கூட்டமே! வானம் இருளும்படி உலாவுகிறாய். போர் முரசம்போல முழங்குகிறாய். முறைமை தெரிந்து அறநெறி பிழையாமல் திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் திறமை மிக்க போர்வீரன் சுழற்றும் வாள்போல மின்னுகிறாய். முழக்கமும் மின்னலுமாக நாள்தோறும் வெற்று ஆரவாரம் செய்கிறாயா அல்லது மழை பொழிவாயா? பொன்னென மலர்ந்த வேங்கை மலரைக் கட்டி அணிந்துகொண்டிருக்கும் தோழியர் ஆயத்தோடு மெல்ல மெல்ல நடந்து குறமகள் தினைப்புனம் காப்பாள்.தழலை, தட்டை ஆகிய கருவிகளில் ஒலியெழுப்பிப் பறவைகளை ஓட்டிக்கொண்டு காப்பாள். அவள் அசோக இலைகளால் தழையாடை அணிந்திருப்பாள். குறமகள் அப்படித் தினைப்புனம் காக்கும் பகுதியிலும் நீ மழை பொழிவாயா?"


தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பது குறிப்பு. இது இறைச்சிப் பொருள். 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link