fbpx
  • No products in the basket.

4.1. புறநானூறு

4.1. புறநானூறு

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும்.

இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும். புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

புறப்பொருள் கருத்துகளைத் தழுவிப் பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன


புறப்பொருள்:

அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போலப் புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.

வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்

வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா

தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி

அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்

பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்

செருவென் றதுவாகை யாம்.


இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.

புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.


பாடியவர்கள்

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 160 புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். அவரை அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்) ஆவார். இந்நூலில் இடம் பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.


மொழிபெயர்ப்புகள்

ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் " Extracts from purananooru & Purapporul venbamalai" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

போராசிரியர் யோர்ச். எல். அகார்ட் என்பவரால் புறநானூறு The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் (1999) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


பாடல்

வான் உட்கும் வடிநீண் மதில்,

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,

ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன்

தகுதி கேள் இனி மிகுதி ஆள!

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும்,

நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே!

அதனால் அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே ;

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!

தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!


(புறம் 18: 11 - 30)

பாடியநெடுஞ்செழியனைப் பாடியது

திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி


பாடல்

விண்ணை முட்டும் திண்ணிய நெடுமதில்

வளமை நாட்டின் வலிய மன்னவா

போகும் இடத்திற்குப் பொருள்

உலகம் வெல்லும் ஒரு தனி ஆட்சி

வாடாத புகழ் மாலை வரவேண்டுமென்றால்

தகுதிகள் இவைதாம் தவறாது தெரிந்துகொள்

உணவால் ஆனது உடல்

நீரால் ஆனது உணவு

உணவு என்பது நிலமும் நீரும்

நீரையும் நிலத்தையும் இணைத்தவர்

உடலையும் உயிரையும் படைத்தவர்

புல்லிய நிலத்தின் நெஞ்சம் குளிர

வான் இரங்கவில்லையேல்

யார் ஆண்டு என்ன

அதனால் எனது சொல் இகழாது

நீர்வளம் பெருக்கி நிலவளம் விரிக்கப்

பெற்றோர் நீடுபுகழ் இன்பம் பெற்றோர்

நீணிலத்தில் மற்றவர் இருந்தும் இறந்தும்

கெட்டோர் மண்ணுக்குப் பாரமாய்க் கெட்டோர்

பொதுவியல் திணை


வெட்சி முதலிய புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.


முதுமொழிக்காஞ்சித் துறை

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல்.


பாடலின் பொருள்

வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே! வலிமை மிக்க வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்ய வேண்டியன என்னவென்று கூறுகிறேன். கேட்பாயாக!

உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு விளங்கும் பாண்டிய நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர். நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால், நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக.

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.


பாடல்

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.* (182)

-கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி


பாடல்

கிடைத்திருப்பதென்னவோ அரிய அமிழ்தம்!

அதனால் என்ன

தனித்துண்ணத் தகுமோ?

எமக்கது பெரிதில்லை

எவரிடத்தும் வெறுப்பில்லை

சோம்பல் சுயமழிக்கும்

உயர்ந்தோர் அஞ்சுவது அஞ்சுவர் தாமும்

புகழா இதோ எம் உயிர்.

இகழா பூமிப்பரிசும் பொருட்டில்லை.

எமக்குள்ளிருப்பது குறுமனம் அன்று

பெருமலையெனத் தமக்கென வாழாது

பிறர்க்கென வாழும் தகைசால் மாண்பினர்

உளதால் அன்றோ

இக்கணமும் உயிர்த்திருக்கிறது உலகம்.


திணை :பொதுவியல் திணை

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும்.


துறை :பொருண்மொழிக்காஞ்சித் துறை மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும். சொல்லும் பொருளும்


பாடலின் பொருள்

தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள், இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அஃது உயிர்க்காப்பது என்பதற்காகத் தனித்து உண்ண மாட்டார்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள்; உலகம் முழுவதும் கிடைப்பதாயிருந்தாலும் பழிவரும் செயல்களைச் செய்யார்; எதற்கும் மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையோர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பாடல் நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.


கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி: பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர். கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.


பாடல்

*காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;

மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,

வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போலத்

தானும் உண்ணான், உலகமும் கெடுமே. (184)


பா வகை :நேரிசை ஆசிரியப்பா


திணை - பாடாண் : ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.


துறை - செவியறிவுறூஉ:  அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாடு அவன் கேட்க அறிவுறுத்தல்


உரை:

ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.


முக்கிய குறிப்பு

அழிந்துபோகும் நிலையில் இருந்த புறநானூற்றின் பல சுவடிகளை ஒப்பிட்டு ஆய்ந்து பயன்பெறும் வகையில், உ.வே.சா. 1894 ஆம் ஆண்டு முதன் : முதலாக அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்.


கற்பவை கற்றபின்...

1. பின்வரும் புறநானூற்றுத் தொடர்களுக்கான பொருளைப் பள்ளி நூலகத்திற்குச் சென்று

அறிந்து எழுதுக.

அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! ( புறம் - 18)

ஆ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் - 189)

இ) யாதும் ஊரே யாவரும் கேளிர் ! ( புறம் – 192 )

ஈ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே! ( புறம் - 312 )

உ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ,

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! ( புறம் - 183 )

2. "உணவாகும் மழை" என்னும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படத்தொகுப்பை உருவாக்குக.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link