• No products in the basket.

2.6. இன்னா நாற்பது

நாற்பது பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் தொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.

இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலின் ‘இன்னா நாற்பது’ எனப் பெயர்பெற்றது.

இந்நூலை இயற்றியவர் கபில தேவர்.

கடவுள் வாழ்த்து

முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா

பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா

சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா

சத்தியான் றாடொழா தார்க்கு.

பொருள்:

முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திருமாலை மறத்தல் துன்பம் தரும். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.

சில பாடல்கள்:

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;

நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;

கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.

நெடுநீர் – கடல்

கடுமொழி – வன்சொல்

பொருள் : கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;

நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;

கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,

எண் இலான் செய்யும் கணக்கு.

புணர்ச்சி – சேர்க்கை

வனப்பு – அழகு

பொருள் :உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம் பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன் இயற்றும் கணக்கு துன்பமாம்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.