fbpx
  • No products in the basket.

16. தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

மனிதன் தனக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்கமுறைகளின் தொகுதியே அறம். உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்களை அறவிலக்கியங்கள் என்றும் அறங்கூர் கவிதைகளை அறக்கவிதைகள் என்றும் குறிப்பிடுவர்.

'அறம்' என்ற சொல்லை அறு+அம் எனப்பிரித்துத் தீமையை அறுப்பது, நீக்குவது என்றும் அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர். பொதுவாகச் சான்றோர் விலக்கியன ஒழித்தலும்; விதித்தன செய்தலும் அறம் எனப்பெறும்.

அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. கி.பி.3- ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதிநூல்கள் தமிழில் பலவிதமான வடிவங்களிலும் வெளிப்பாட்டு முறைகளிலும் எழுதப்பெற்றுள்ளன. காதலும் வீரமும் சங்க காலத்தில் போற்றப்பட்டதைப்போலவே அறமும் நீதியும் சங்கம் மருவிய காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன.

சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு என்னும் பழம்பாடல் இப்பதினெட்டு நூல்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. இந்நூல்களை அறம், அகம், புறம் என வகைப்படுத்துவர் . அறம் பதினொன்று, அகம் ஆறு, புறம் ஒன்று எனத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறம் பற்றிய நூல்கள் மிகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியங்கள் முழுவதுமே அற இலக்கியங்கள் எனலாம். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருப்பினும், அவற்றின் பாடுபொருளின் மையம் ஏதோ ஓர் அறமாகவே இருக்கிறது. தமிழ் அறநூல்கள் அதன் இலக்கியச்சுவைக்காகவும் போற்றப்படுகின்றன. பிற இலக்கியங்களின்கண் அமைந்த இலக்கியச்சுவை, சொல்லழகு, இசைக்கட்டு, பாவமைப்பு போன்றன தமிழ் அறவிலக்கியங்களிலும் மிளிரக்காணலாம். அறவியல் கவிதைகள், எக்காலத்திற்கும் ஏற்ற அறக்கருத்துகளைக் கொண்டிலங்குவதை, அக்கவிதைகளைக் கற்பதன் மூலம் அறியலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்த அறநூல்கள், பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் எனத் தமிழின்கண் அமைந்த அறநூல்களை இருபிரிவாகப் பிரிக்கலாம்.


ஒருமறை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொது மறை. இஃது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. இந்நூலை இயற்றிய திருவள்ளுவரின் முழு வரலாறு கிடைக்கவில்லை . எனினும் இவர் பிறந்த ஆண்டு கி.மு.31எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு (தி.பி.) கணக்கிடப்படுகின்றது.

கூடாவொழுக்கம் வஞ்சமனம் கொண்டு உலகத்தாரை ஏமாற்றி வாழ்வு நடத்துவது பொய்ஒழுக்கமாம். இதைக் கூடாவொழுக்கம் என வள்ளுவர் குறிக்கிறார். ஒழுக்கமுடைமை என்ற அதிகாரம் வகுத்து மாந்தர் ஒழுகுமுறைகளை முன்பு அறிவுறுத்திய வள்ளுவர் இங்குக் கூடாவொழுக்கம் எனத் தனியே பேசுகிறார்.

இவ்வதிகாரம் பொதுவாகப் பிறரை ஏமாற்றி வாழும் அனைவரையும் பற்றியது என்றாலும் போலித்துறவியரை மனத்தில் கொண்டே வரையப்பட்டவை என்பதை எளிதில் உணரமுடிகிறது.


இருநானூறு

திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது நாலடியார் ஆகும். நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம் என்று வெவ்வேறு பெயர்களாலும் இந்நூல் சுட்டப்படுகின்றது. சமணமுனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பே இந்நூல். இதனைத் தொகுத்தவர் பதுமனார். இந்நூலைப் போன்றே 400 வெண்பாக்களால் ஆனது பழமொழி நானூறு. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமையப் பாடப்பட்டிருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றியவர் முன்றுறையரையனார்.

வாழ்க்கையின் எல்லா இன்னல்களுக்கும் காரணமான அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்ப்பது கல்வி. இக்கருத்தை விளக்கும் நாலடியார் பாடல் நோக்கத்தக்கது.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

- நாலடியார்

கல்வியின் சிறப்பை விளக்குவதாக அமைந்த இச்செய்யுளில் உவமையோ பிற இலக்கியச் சிறப்புகளோ அமையாவிட்டாலும், கூறுவதைச் செறிவாக, சிறப்பாகச் சொல்லும் தன்மை அமைந்திருப்பதைக் காணலாம்.

தனக்கு உதவி செய்தவர்களுக்குத் தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்துகொள்வதற்கு ஒப்பாகும் என்ற கருத்தை பழமொழி நானூற்றுப் பாடலொன்று கூறுகிறது.

நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்

கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி

நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த

கோடு குறைத்து விடல்.

- பழமொழி நானூறு

தமக்கு உதவியவர்களுக்கு அவரின் பகைவரோடு சேர்ந்து தீங்கிழைப்பது, ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலைப் போன்றதாகும்.


மும்மருந்து

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்துப் பெயர்கள் கொண்ட அறநூல்கள் மூன்று. அதில் முதலாவதாக அமைந்த நூல் திரிகடுகம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கலந்த மருந்து உடல்நோயைத் தீர்ப்பது போல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துகள் உள்ளத்து நோயைத் தீர்ப்பதால் இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. 100 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார்.

இரண்டாவதாக அமைந்த நூல் சிறுபஞ்சமூலம். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் கலந்த மருந்து உடலை வலுப்படுத்துவதுபோல, இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் அமைந்த ஐந்து கருத்துகள் வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. 102 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் காரியாசான். மூன்றாவதாக அமைந்தது ஏலாதி. ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் கலந்த மருந்து உடலுக்குறுதி சேர்ப்பதுபோல, செய்யுள் தோறும் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் ஏலாதி எனப்பெயர் பெற்றது. 80 வெண்பாக்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார்.

மக்களைக் காப்பது அரசனின் கடமை. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது ஆன்றோர் வாக்கு. சிறுபஞ்சமூலம் அரசனின் இயல்புகளை விவரிக்கும் விதம் இங்கு நோக்கத்தக்கது.

பொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போர்த்த

அருள்போகா வாரறமென் றைந்தும் இருள்தீரக்

கூறப்படும் குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்

தேறப்படும் குணத்தி னான்

- சிறுபஞ்சமூலம்

பொருள், இன்பம், இடுக்கண் வந்த காலத்து அஞ்சாமை, பிறிதோர் உயிரின் துன்பங்கண்டு இரங்குதல், நிலையான அறம் ஆகிய ஐந்தும் உடையவன் நல்ல அரசனாகச் செயலாற்று வதற்குரிய தகுதியுடையவனாகிறான்.


நானாற்பது

நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்களாவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது. இவற்றுள் முறையே முதலிரண்டும் அறநூல்கள். கார் நாற்பது அகநூல். களவழி நாற்பது புறநூல்.

இன்னது துன்பம் தரும் என்று கூறும் 40 வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இன்னது இன்னது இன்பம் பயக்கும் என 40 வெண்பாக்களைக் கொண்டு பூதஞ்சேந்தனாரால் பாடப்பட்ட நூல் இனியவை நாற்பது.

வாழ்விற்கு இன்பம் பயப்பன இவை இவை என இனியவை நாற்பது பட்டியலிடுகிறது. இன்னது செய்யாதே என்பதை விட இதைச்செய் என நெறிப்படுத்தும் பாங்கு இந்நூலின் சிறப்பு.

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே

எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது.

- இனியவை நாற்பது

கற்றறிந்தவர் முன் தான் கற்ற கல்வியைச் சொல்வது மிக இனியது. அறிவால் மேம்பட்ட கல்வியாளரைச் சேர்ந்து பொருந்தியிருப்பது மிகப் பெருமையுடன் முற்றிலும் இனியது. எள்ளளவாவது, தான் பிறரிடம் இரவாமல் தன் பொருளைப் பிறர்க்குத் கொடுத்து உதவுவது எல்லா விதத்திலும் மிக இனியது.


மணிமொழிக்கோவை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்றையும் மணிமொழிக்கோவை என்பர். நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற கடிகை என்னும் அணிகலன் போல ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அரிய கருத்துகளைக் கொண்டுள்ளதால் இந்நூல் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இந்நூல் 104 வெண்பாக்களைக் கொண்டு விளம்பிநாகனாரால் இயற்றப்பெற்றது.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image