fbpx
  • No products in the basket.

அதிகாரம்: பண்புடைமை

பால்: பொருட்பால்

1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

5. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

6. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

8. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.

நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

9. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்.

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image