fbpx
  • No products in the basket.

அதிகாரம்: அடக்கமுடைமை

பால்: அறத்துப்பால்

1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

8. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

10. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image